காங்கிரஸ் ஆட்சி சீர்குலைத்த இந்தியாவின் மதிப்பை உயர்த்தவே வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறேன் என்று செய்தி நிறுவனங்களுக்கு அளித்த சிறப்பு பேட்டியில் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மோடி அரசு பதவியேற்று ஓராண்டு நிறைவு பெற்றதை யொட்டி அவர் செய்தியாளர்களுக்கு சிறப்புபேட்டி அளித்தார். அவரிடம் கடந்த ஓராண்டில் அடிக்கடி வெளி நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டது ஏன்? என்று கேட்கப்பட்டது. அப்போது, முதல் முறையாக மோடி தனது தொடர் வெளிநாட்டு பயணம் பற்றி மனம் திறந்து பேசினார். அவர் கூறியதாவது:–-

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் 10 ஆண்டுகால ஆட்சியில் வெளிநாடுகளில் இந்தியாவின் மீதான மதிப்பு சீர்குலைந்துபோய் இருந்தது. இதனால் வெளிநாடுகளுடன் தொடர்புகொள்வதே சவாலானதாகி விட்டது. தனது ஆட்சியில் நடந்த ஊழல்கள் பற்றி உலக நாடுகளுக்கு தெரியாது என்று காங்கிரஸ் நினைத்தால் அதைப் போல் தவறான விஷயம் வேறில்லை. எனவே, நான் என்ன பேசுகிறேன் என்பதைப்பற்றி கவலைப்படாமல் காங்கிரஸ் தனது ஊழல்களுக்காக வெட்கப்பட வேண்டும்.

உலகநாடுகள் இந்தியாவிடம் இருந்து நிறைய எதிர் பார்க்கின்றன. பிரிக்ஸ் நாடுகள் உலக பொருளாதாரத்தை இந்தியா உயர்ந்த நிலைக்கு கொண்டுசெல்லும் என்று எதிர்பார்த்தன. ஆனால் விரைவிலேயே பிரிக்ஸ் நாடுகள் இந்தியாவை பல வீனமாக பார்க்கும் நிலை உருவானது. இதுபோன்ற சவாலான கால கட்டத்தில் தான் நான் பிரதமராக பதவி ஏற்றேன்.

இந்த உலகம் எனக்கு புதிதான ஒன்று. அதுபோலவே இந்த உலகத்துக்கும் நான் புதிது. எனவே இந்தியாவின் மீது உலகநாடுகள் கொண்டிருந்த பார்வையை மாற்றவேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. இதை ஒரு பெரிய சவாலாகவே ஏற்றுக்கொண்டு வெளிநாடுகளுக்கு பயணம் செல்கிறேன். இந்தியாவிற்கான வாய்ப்புகள் பற்றி வெளிநாடுகளுடன் சம அந்தஸ்து அடிப்படையில் பேசுகிறேன். தற்போது இந்தியாவை உலகநாடுகள் மிகவும் திருப்தியான முறையில் பார்க்க தொடங்கி இருக்கின்றன. இது எனது அரசின் கொள்கைகளுக்கும், உத்திகளுக்கும், நான்சார்ந்த கட்சிக்கும், 125 கோடி மக்கள் அளித்த உறுதியான தேர்தல்தீர்ப்புக்கும் கிடைத்த பெருமை.

யோகா கலையைபோற்ற சர்வதேச தினம் கொண்டாடப்பட வேண்டும் என்ற இந்தியாவின் பரிந்துரையை ஐ.நா. சபை ஏற்றுக் கொண்டு ஜூன் 21-ந்தேதியை சர்வதேச யோகாதினமாக அறிவித்திருப்பதும் இந்த திருப்தியான பார்வையில் ஒன்றாகும்.

பாகிஸ்தானுடன் அமைதி பேச்சுவார்த்தை நடத்துவதில் உள்ள முட்டுக் கட்டை எப்போது நீங்கும்?

''பாகிஸ்தானிடம் இருந்து ஒன்றே ஒன்றைத் தான் நான் எதிர்பார்க்கிறேன். பாகிஸ்தான் அமைதி மற்றும் அகிம்சை வழியை தேர்ந்தெடுக்க வேண்டும். வன்முறைபாதை அவர்களுக்கும் நல்லதல்ல, நமக்கும் நல்லது கிடையாது. அத்தகைய சூழலில் தான் பேச்சு வார்த்தை நடத்த இயலும்'' .

சீனாவுடன் உள்ள நீண்ட கால எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப்படுமா?

ஒத்துழைப்பு மற்றும் அமைதிவழியில் இப்பிரச்சினைக்கு தீர்வுகாண இந்தியாவும் சீனாவும் உறுதி பூண்டுள்ளன. எனது சீன பயணத்தின் போது அதிபர் ஷின் பிங்கிடம் அழுத்தம் திருத்தமாக இதை வலியுறுத்தினேன்''.

நிலம் கையகப்படுத்தும் மசோதா விவகாரத்தில் நீங்கள் தொழில் அதிபர்களுக்கு சாதகமாக நடந்து கொள்வதாக காங்கிரஸ் குற்றம் சாட்டுகிறதே?

''இது அபத்தமானது. விலைமதிப்பு மிக்க நிலக்கரி மற்றும் அலைக்கற்றை போன்ற வளங்களை தங்களுக்கு பிடித்த தொழில் அதிபர்களுக்கு ஒதுக்கீடுசெய்தவர்களுக்கு இதைப்பற்றி பேச உரிமை இல்லை. முன்பிருந்த நில மசோதாவில் காணப்பட்ட குறைபாடுகளை எனது அரசு சரிசெய்தது. எங்களது நில மசோதா விவசாயிகளின் நலனுக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது''

மத உணர்வுகளை தூண்டும்விதமாக சிலர் தொடர்ந்து பேசிவருகிறார்களே?

''இதற்கு, முன்பே பதில் அளித்து இருக்கிறேன். எந்த சமூகத்துக்கும் எதிரான செயல் களில் யார் ஈடுபடுவதையும், வன்முறையை கையாள் வதையும் சகித்துக்கொள்ள முடியாது. எனவே தேவையற்ற கருத்துகளை யாரும் பேசக்கூடாது. நமது அரசியலமைப்பு அனைத்து மக்களுக்கும் மதச்சுதந்திரத்தை உறுதி செய்துள்ளது'' என்று குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.