ராமர் பாலத்துக்கு எந்த விதப் பாதிப்புமின்றி மாற்றுப் பாதையில் சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை செயல்படுத்த மத்திய அமைச்சரவை பரிசீலித்து முடிவெடுக்கும் என்று மத்திய சாலை, நெடுஞ்சாலை, கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்தார்.

மத்திய கப்பல்துறை, உள்நாட்டு நீர்வழி போக்கு வரத்து ஆணையம், இந்தியதொழில், வர்த்தக சபை சம்மேளனம் (ஃபிக்கி) ஆகியவை சார்பில் உள்நாட்டில் நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்துவது தொடர்பான தேசிய அளவிலான கருத்தரங்கம் தில்லியில் நடைபெற்றது.

இதில் கலந்துகொண்ட பிறகு செய்தியாளர்களிடம் பேசிய நிதின் கட்கரியிடம், சேதுசமுத்திர கால்வாய்த் திட்டத்தின் தற்போதைய நிலை குறித்து கேட்கப் பட்டது. அதற்கு அமைச்சர் அளித்த பதில்: சேதுசமுத்திர திட்டம் தொடர்பான வழக்கு தற்போது உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது.

அது பற்றி விரிவாக விளக்க இயலாது. இருப்பினும், ராமர்பாலத்தை இடிக்க மாட்டோம் என பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி மக்களுக்கு உறுதியளித்துள்ளது. எனவே, சேதுசமுத்திர கால்வாய் திட்டத்தை மாற்று பாதையில் செயல்படுத்தும் வகையில் 4க்கும் மேற்பட்ட திட்டங்கள் தயாரிக்கப்பட்டு, மத்திய அமைச் சரவையின் பரிசீலினைக்கு அனுப்பப்பட்டுள்ளன. அவற்றை ஆராய்ந்தபிறகு முடிவு எடுக்கப்படும்' என்றார் நிதின் கட்கரி.

1,100 தீவுகள்திட்டம்: முன்னதாக இக்கருத்தரங்கை தொடங்கி வைத்து அமைச்சர் நிதின்கட்கரி பேசியதாவது: நமது நாட்டில் 101 நீர் வழிப் பாதைகளில் போக்குவரத்தை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளோம். இதற்கான மசோதா, நாடாளுமன்றத்தில் அண்மையில் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வரும் கூட்டத் தொடரில் இந்த மசோதா நிறைவேறினால் ரூ.50 ஆயிரம் கோடியில் இத்திட்டத்தை மூன்று ஆண்டுகளுக்குள் நிறைவேற்ற இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

நீர்வழி போக்குவரத்தை மேம்படுத்தினால் 1,100 தீவுகள், 300 கலங்கரை விளக்கங்களை உருவாக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடி விருப்பம் தெரிவித்துள்ளார். இதன் மூலம், நம் நாட்டில் சுற்றுலா வாய்ப்புகளை அதிகரிப்பதுடன், இளைஞர்களுக்கான வேலைவாய்ப்புகளையும் அதிக அளவில் உருவாக்கமுடியும். பொதுத் துறை – தனியார் பங்களிப்பு உதவியுடன் இத்திட்டத்தை மேற்கொள்ள அரசு திட்டமிட்டு வருகிறது.

தற்போது 101 நீர்வழி சாலைகளில் 16க்கு விரிவான திட்ட அறிக்கைகள் இந்தமாத இறுதிக்குள் முடிவடைந்து விடும். 40 நீர்வழிச் சாலைகளுக்கு இந்த ஆண்டு இறுதிக்குள் திட்டஅறிக்கை தயாரிக்கப்படும். வங்க தேசத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி விரைவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார். அப்போது, வர்த்தக போக்குவரத்தை கடல்வழியாக மேற்கொள்ள இருநாடுகளுக்கும் இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்படும்.

மேலும் வாராணசி, சாஹாப்கஞ்ச், ஹால்டியா, கொல்கத்தா உள்ளிட்ட 4 இடங்களில் சாலை, ரயில், கப்பல் என பல்நோக்கு போக்கு வரத்து மையங்களை உருவாக்க முடிவுசெய்துள்ளோம். இவை தவிர அஸ்ஸாம், அந்தமான், நிகோபார் தீவுகள், கான்ட்லா ஆகியவற்றில் கப்பல்கட்டவும், பழுது நீக்கும் மையங்களை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளோம் என்றார் நிதின்கட்கரி.

Tags:

Leave a Reply