வங்காளதேசத்தில் இந்திய நிதி உதவியுடன் கூடிய 6 திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். ஜனாதிபதி அப்துல்ஹமீது, எதிர்க் கட்சி தலைவர்களையும் அவர் சந்தித்தார்.

பிரதமர் நரேந்திர மோடி வங்கதேசத்துக்கு 2 நாள் பயணம் மேற்கொண்டிருந்தார். பயணத்தின் முதல் நாளில் அவர் அந்நாட்டின் பிரதமர் ஷேக் ஹசினாவை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார். அந்த நாட்டுக்கு ரூ.12 ஆயிரத்து 800 கோடி கடன் உதவி அறிவித்தார். இருநாடுகளுக்கு இடையேயான எல்லை பிரச்சினைக்கு தீர்வுகண்டு, அதுதொடர்பான ஆவணங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன. 22 முக்கிய ஒப்பந்தங்களும் கையெழுத்தாகின.

பயணத்தின் 2–வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அவர் டாக்காவில் லால் பாக்கில் 12–ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட பிரசித்திபெற்ற இந்து கோவிலான டாகேஷ்வரி தேசிய கோவிலுக்கு சென்றார். (டாகேஷ்வரி என்ற பெயர், டாக்காவின் தெய்வம் என்பதை குறிக்கிறது.) அங்கு அவரை கோவில்குருக்கள், அதிகாரிகள் வரவேற்றனர். அவர் சாமிக்கு தீப ஆராதனைகாட்டி வழிபட்டார்.

மோடிக்கு டாகேஷ்வரியின் சிறிய உருவச்சிலை, சால்வை வழங்கப் பட்டது. இந்தகோவிலுக்கு வங்காளதேச பிரதமர் ஷேக்ஹசினா ஆண்டுக்கு ஒரு முறை செல்வது வழக்கம் என தகவல்கள் கூறுகின்றன.

டாகேஷ்வரி கோவிலில் இருந்து பிரதமர் மோடி நேராக கோபி பாக்கில் உள்ள ராமகிருஷ்ணா மடத்துக்கு 9.15 மணிக்குசென்றார். இது கொல்கத்தா பேலூர் மடத்தின் கிளைஆகும். அங்கு மோடியை சுவாமி சுஹிதானந்தா, சுவாமி துருவேஷனந்தா ஆகியோர் வரவேற்றனர். சுவாமி விவேகானந்தரின் சுய சரிதை உள்ளிட்ட நினைவுப்பரிசுகள் வழங்கி, மோடியை கவுரவித்தனர்.

தொடர்ந்து 9.45 மணிக்கு பரிதரா என்ற இடத்தில் உள்ள இந்திய தூதரகத்துக்கு (சான்சரிவளாகம்) பிரதமர் சென்றார். அங்கு அவர் இந்திய நிதி உதவியுடன் கூடிய வங்காள தேச மைத்திரி மகளிர் விடுதி, விக்டோரியா கல்லூரி, மிர்புரில் பார்வையற்றோர் கல்வி, மறு வாழ்வு அபிவிருந்தி அமைப்பின் 3–வது தள கட்டுமானப் பணிகள் உள்ளிட்ட 6 திட்டங்களை தொடங்கிவைத்தார். அந்த திட்டங்களின் பயனாளிகளுடன் அவர் கலந்துரையாடினார்.

பின்னர் அவர் வங்காளதேச ஜனாதிபதி மாளிகை சென்றார். அங்கு அவரை ஜனாதிபதி அப்துல்ஹமீத் வரவேற்றார். இருதலைவர்களும் இந்திய–வங்காளதேச உறவுகுறித்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

மோடியை கவுரவித்து ஜனாதிபதி அப்துல்ஹமீது மதிய விருந்து வழங்கி சிறப்பித்தார். இதில் பிரதமர் ஷேக் ஹசினாவும் கலந்து கொண்டார்.

பிரதமர் நரேந்திர மோடியை அவர் தங்கியிருந்த பான் பசிபிக் சோனார்கான் நட்சத்திர ஓட்டலில் அந்த நாட்டின் பாராளுமன்ற எதிர்க் கட்சி தலைவர் எர்ஷாத் சந்தித்து பேசினார்.

அதையடுத்து பிரதமர் மோடியை வங்காளதேச தகவல்துறை மந்திரி ஹசானுல் ஹக், சிவில் விமான போக்குவரத்து மந்திரி ரஷீத்கான் மேனன் ஆகியோரும் சந்தித்து பேசினர்.

இந்த சந்திப்புகளுக்கு பிறகு , பிரதமர் மோடியை வங்காளதேசத்தின் முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியத்துவ கட்சி தலைவருமான கலிதா ஜியா, தூதுக் குழுவினருடன் சந்தித்து பேசினார். பின்னர் இருதலைவர்களும் தனிப்பட்ட முறையிலும் சந்தித்துபேசினர். வங்காள தேசத்தின் தற்போதைய அரசியல் நிலவரம் குறித்து அவர்கள் விவாதித்ததாக தெரிகிறது.

பிரதமர் மோடியை வங்காளதேச தொழில்வர்த்தக சபையின் தலைவர் அப்துல் மாத்லுப் அகமது தலைமையில் அந்நாட்டின் தொழில் அதிபர்களும் சந்தித்து பேசினர்.

Leave a Reply