மாணவர் அமைப்பிடம் சென்னை ஐஐடி நிர்வாகம் சரணடைந்து விட்டதாக பாஜக தேசியசெயலாளர் எச்.ராஜா குற்றம் சாட்டியுள்ளார்.

இது குறித்து சென்னை ஐஐடி இயக்குநர் பேராசிரியர் பாஸ்கர் ராம மூர்த்திக்கு அவர் எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

ஐஐடி மாணவர் அமைப்புமீதான தடை விவகாரத்தை தீர்ப்பதற்கு ஐஐடி நிர்வாகம் மேற்கொண்ட அணுகு முறை மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. ஐஐடி வளாகத்தில் சாதி ,வகுப்புவாத கலவரத்தை உண்டாக்கும் நோக்கம்கொண்ட, கட்டுப்பாடு இல்லாத சக்திகளிடம் ஐஐடி நிர்வாகம் சரண் அடைந்திருப்பது கடும் கண்டனத்துக் குரியது. இந்த பிரச்சினையை தொடக்கம்முதலே ஐஐடி நிர்வாகம் தவறாகவே கையாண்டது.

மாணவர் அமைப்பின் அங்கீகார விதி முறை மீறல், இந்துமதத்தின் மீது தாக்குதல் என இந்தபிரச்சினை இரு விஷயங்களை உள்ளடக்கியதாகும். அந்தவகையில், மாணவர் அமைப்பு அங்கீகார விதிமீறல் தங்கள் கல்வி நிறுவனம் சார்ந்த பிரச்சினையாக இருக்கலாம். ஆனால், இந்துமதத்தின் மீதான தாக்குதல் என்பது நாட்டில் உள்ள 100 கோடி இந்துக்கள் சம்பந்தப்பட்ட பிரச்சினை ஆகும். மாணவர் தடைவிவகார பிரச்சினைக்கு தீர்வுகாண முயன்றபோது, இந்தவிஷயத்தை நீங்கள் ஏன் பரிசீலிக்கவில்லை?

இந்துமதத்தை விமர்சித்து அம்பேத்கர் – பெரியார் வாசகர்வட்டம் அச்சிட்டு வெளியிட்ட கருத்தில் தவறு ஒன்றும் இல்லை என்று ஐஐடி நிர்வாகம் கருதுகிறதா? மற்றமதங்களை தாக்கி ஒருதரப்பு மாணவர்கள் கருத்துகளை வெளியிடும் போது ஐஐடி நிர்வாகம் கண்டும்காணாதது போல் இருக்குமா? ஐஐடி வளாகத்தில் இந்துமதம் தாக்கப்படுவதை நீங்கள் எப்படி அனுமதிக்கலாம்? சமீபகாலமாக சமூக விரோத, தேசவிரோத செயல்பாடுகள் உங்களின் தலைமையிலான நிர்வாகத்தில் ஊக்குவிக்கப்பட்டு வருகின்றன என்பதை தங்களின் மேலான கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன்.

கருத்துச்சுதந்திரம் என்று சொல்லப்படும் போது அது தொடர்பான விவாதமோ, கருத்துப்பகிர்வோ ஒருதலைப் பட்சமாக இருக்க முடியாது. மாணவர் அமைப்பினர் இந்துமதம் குறித்தும் பிரதமர் நரேந்திர மோடி குறித்தும் ஒருதலைப் பட்சமாக கருத்து தெரிவித்துள்ளனர். சமஸ்கிருதமொழி மட்டுமே இந்தியாவின் ஆட்சி மொழியாக்கப்பட வேண்டும், தலித்துகள் இஸ்லாம் அல்லது கிறிஸ்துவ மதத்தை தழுவ அனுமதிக்கமாட்டேன், ராணுவத்தில் முஸ்லீம்களை சேர்த்தால் அது இந்தியாவுக்கு ஆபத்து என்ற அம்பேத்கரின் சிந்தனைகள் குறித்தும் விவாதிக்கப்பட வேண்டும். அப்போதுதான் அது நடுநிலைமையான கருத்துப்பகிர்வாக, விவாத களமாக இருக்கும் இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.