தமிழ்நாட்டில் 24 இடங்களில் திறன் மேம்பாட்டு பயிற்சி மையங்களும், கோவையில் தொழில்வளர்ச்சிக்கான உற்பத்தி கூடமும் தொடங்க மத்திய அரசுக்கு பரிந்துரைசெய்யப்படும் என்றும் மத்திய மந்திரி கல்ராஜ் மிஸ்ரா தெரிவித்துள்ளார்..

கோவை அவினாசிரோட்டில் உள்ள கொடிசியா வளாகத்தில் சர்வதேச எந்திரகண்காட்சி (இன்டெக்-2015) கடந்த 5-ந்தேதி தொடங்கி நடைபெற்றது. நேற்று நிறைவுவிழா நடந்தது. விழாவில் மத்திய சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்துறை மந்திரி கல்ராஜ் மிஸ்ரா கலந்துகொண்டார். அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-

இந்த தொழிற்கண்காட்சி உற்பத்தியாளர்களுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இதன்மூலம் தரமான பொருட்களின் உற்பத்திகுறித்த விழிப்புணர்வு ஏற்படும். தரத்தில் போதியகவனம் செலுத்தும் பட்சத்தில் போட்டிகளை சமாளிக்க முடியும். மேக் இண்டியா திட்டத்தின் மூலம் இந்தியாவில் தொழில் துறையை மேம்படுத்திட பிரதமர் நரேந்திரமோடி நடவடிக்கை எடுத்து வருகிறார்.

இதன் அடிப்படையில் இந்தியா முழுவதும் உள்ள 652 மாவட்டங்களில் ஏற்றதொழில் எது? தொழில் திறன் என்ன? என்பது குறித்து ஆய்வுசெய்யப்பட்டு வருகிறது. சிறு, குறு தொழில்களுக்கான வங்கிக் கடன் கிடைப்பதில் சிரமம், 3 மாதங்கள் வட்டிசெலுத்த வில்லை என்றால் கடுமையான நடவடிக்கைகள், ஜாமீன் இல்லாமல் கடன்வழங்க மறுப்பு உள்பட பல்வேறு பிரச்சினைகள் உள்ளன. இந்த பிரச்சினைகளை தீர்க்க குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும்.

இதன் மூலம் சிறு, குறு தொழிற் சாலைகளில் தொழில் வளர்ச்சி மேம்படும். மேலும் மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்கள் மற்றும் அரசுசார்ந்த நிறுவனங்களும் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் உற்பத்திசெய்யும் உதிரிபாகங்கள், மூலப்பொருட்களை 20 சதவீதம் கொள்முதல் செய்வதற்கு உத்தரவிடப்பட்டு நடைமுறைப் படுத்தப்பட்டு வருகிறது.

தற்போது அதிகளவில் உதிரிபாகங்கள் கொள்முதல் செய்யப்படுகிறது. மேலும் தொழிற் சாலை பதிவுகள் ஆன்லைன் மூலம் கையாளப் படுகின்றன. இது தவிர தொழிற்சாலைகளில் ஆய்வுக்குசெல்லும் அதிகாரிகள் முன்கூட்டியே தகவல்தெரிவிக்க வேண்டும். தாங்கள் ஆய்வுசெய்த தகவல் அறிக்கையை 22 மணி நேரத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்கிற விதி முறைகள் கொண்டுவர பட்டுள்ளது.

இந்தியா முழுவதும் ரூ.200 கோடி செலவில் 500 இடங்களில் சிறு, குறு, நடுத்தரதொழில் வளர்ச்சிக்காக 500 திறன்மேம்பாட்டு மையங்கள் அமைக்கப்படுகிறது. இதில் 24 மையங்கள் தமிழ்நாட்டில் அமையும். இதில் தொழிற்துறையினர் மற்றும் இளைஞர்களுக்கு பயிற்சிகள் அளிக்கப்படும். இதன் மூலம் சுயதொழில் தொடங்கி சாதிப்பதற்கான வழிகாட்டுதல், திறன் மேம்பாடு கிடைக்கும். இதன் மூலம் கிராமப்புறங்களில் உள்ள தாழ்த்தப்பட்ட, பழங்குடியின 10ம் வகுப்பு, ஐ.டி.ஐ, பாலிடெக்னிக் படித்த மாணவ-மாணவிகள் பயன்பெற முடியும். இதுதவிர இந்தியா முழுவதும் 15 இடங்களில் உற்பத்திகூடங்கள் (டூல் ரூம்) அமைக்கப்படுகிறது. இதில் சென்னையில் ஒன்று நிறுவப்படும். கோவையில் அமைக்க மத்தியரசுக்கு பரிந்துரைக்கப்படும். ஆனால் சென்னையில் அமையும் உற்பத்தி கூடத்தின் கிளை கோவையில் தொடங்கப்படும் என்றார்.

Leave a Reply