நாடு முழுவதும் நிலுவையில் உள்ள 18 லட்சம் செக்மோசடி வழக்குகளில் பாதிக்கப் பட்டோருக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், புதிய அவசரசட்டம் கொண்டுவர மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன்மூலம் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசு கொண்டுவரும் 14வது அவசர சட்டமாக இது இருக்கும்.

பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்தக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி கூறியதாவது:

செக் மோசடி வழக்குகள் தொடர்பாக தற்போது நாடுமுழுவதும் 18 லட்சம் வழக்குகள் உள்ளன. இது தொடர்பான ஒரு வழக்கில் அளித்த தீர்ப்பில், பணமில்லாமல் செக் திரும்புவது தொடர்பான செக் மோசடி வழக்குகளை, அந்த செக்கை அளித்தவர் உள்ளபகுதி அமைந்துள்ள நீதிமன்றத்திலேயே தொடர முடியும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவு அளித்தது.

இது செக் மோசடி செய்பவர்களுக்கு சாதகமாகவும், பாதிக்கப்படு வோருக்கு எதிராகவும் உள்ளது என்று பல்வேறு தரப்பினர் அரசிடம் முறையிட்டனர். அதை தொடர்ந்து இது தொடர்பாக பணமுறிவு மாற்று முறை சட்டத்தில் (நெகோஷியபிள் இன்ஸ்ட்ருமென்ட்) திருத்தம் செய்வதற்கான மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டது. மாநிலங்களவையில் இது நிலுவையில் உள்ளது. இந்த நிலையில் செக் மோசடி வழக்குகளில் பாதிக்கப்பட்டுள்ள 18 லட்சம் பேருக்கு பலனளிக்கும் வகையில் செக் மோசடி தொடர்பான அவசரசட்டம் கொண்டு வர அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.

இதன்படி, செக் மோசடி வழக்குகளை, செக்கை பெற்றுக் கொண்டவர் உள்ள பகுதியில் உள்ள நீதிமன்றத்திலேயே தொடரலாம். மேலும் ஒரு நபர் மீது மூன்றுக்கும் மேற்பட்ட செக் மோசடி வழக்குகள் இருந்தால், அவை ஒருங்கிணைத்து, அவர்மீது முதல் முறையாக வழக்கு தொடரப்பட்ட நீதிமன்றத்திலேயே விசாரிக்கலாம். இதன் மூலம் செக் மோசடியில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உடனடி தீர்ப்பு, நிவாரணம் கிடைக்கும்.

கரும்பு விவசாயிகளுக்கு கரும்பு ஆலைகள் அளிக்கவேண்டிய நிலுவைத் தொகை ரூ.21 ஆயிரம் கோடியைத் தாண்டிவிட்டது. பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கும் வகையில், நிதிசிக்கலில் உள்ள கரும்பு ஆலைகளுக்கு ரூ.6,000 கோடி வட்டியில்லா கடனுதவி அளிக்கப்படும். இந்தமாத இறுதியின்படி தனது நிலுவைத் தொகையில் 50 சதவீதம்வரை செலுத்திய கரும்பு ஆலைகளுக்கு இந்த கடனுதவி அளிக்கப்படும்.

இதனால் வட்டி வகையில் அரசுக்கு ரூ.600 கூடுதல்செலவு ஏற்படும். இருப்பினும் கரும்பு விவசாயிகளின் நலனை கருதி, அவர்களுக்கு உடனடியாக நிலுவை தொகை கிடைக்க இந்த முடிவு எடுக்கப்பட்டது. நிலுவை தொகை குறித்த பட்டியலை கரும்பு ஆலைகள் அளித்ததும், விவசாயிகளுக்கான நிலுவைத்தொகை அவர்களுடைய வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்படும். உற்பத்தி செலவை விட மிகக் குறைந்த விலையே கிடைப்பதால் கரும்பு ஆலைகள் கடும் நிதி சிக்கலில் உள்ளன. நடப்பு 2014-15 ஆண்டில் (அக்டோபர்-செப்டம்பர்) நாட்டின் மொத்தகரும்பு உற்பத்தி 2.8 கோடி டன்னாக இருக்கும். இது முந்தைய ஆண்டு 2.43 கோடி டன்னாக இருந்தது. நாட்டின் ஆண்டு மொத்த தேவை 2.4 கோடி டன்னாகும்.

பருப்பு இறக்குமதி: தானிய வகைகள், குறிப்பாக பருப்பு வகைகளின் விலை தொடர்ந்து உயர்ந்துவருவதை தடுக்கும் வகையில் அவற்றை இறக்குமதிசெய்ய மத்திய அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது. பருப்புவகைகளின் விலை கடந்த ஓராண்டில் 64 சதவீதம் உயர்ந்துள்ளது. சாதகமான பருவ நிலை சூழ்நிலை இல்லாத காரணத்தினால் 2014-15 காலத்தில் பருப்பு உற்பத்தி 20 லட்சம்டன் அளவுக்கு குறைந்தது. முந்தைய ஆண்டு 1.92 கோடி டன்னாக இருந்த உற்பத்தி 1.74 கோடி டன்னாகக் குறைந்துள்ளது. இதனால் பற்றாக் குறையை சமாளிக்கவும், விலை உயர்வை தடுக்கவும், பருப்புவகைகளை இறக்குமதிசெய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் பதுக்கல் காரர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி அனைத்து மாநில அரசுகளையும் கேட்டு கொண்டுள்ளோம். தற்போது ஆண்டுக்கு சராசரியாக 40 லட்சம்டன் பருப்பு வகைகள் இறக்குமதி செய்யப்பட்டு வருகிறது. தற்போது தேவைக்கு ஏற்ப பருப்புவகைகள் இறக்குமதி செய்யப்படும்.

சார்க் நாடுகளில் உள்ள மூன்று நாடுகளுடன் தாராள போக்குவரத்துக்கான ஒப்பந்தம்செய்ய மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அனைத்து சார்க் நாடுகளுடனும், தாராள போக்கு வரத்து மேற்கொள்ள கடந்த ஆண்டு நவம்பரில் அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. ஆனால் பாகிஸ்தானுடனான உறவில் முன்னேற்றம் ஏற்படாததால் அது நிறைவேற்றப்பட வில்லை. இந்நிலையில் பூடான், வங்கதேசம், நேபாளம் ஆகிய நாடுகளுடன் இந்த ஒப்பந்தம் செய்யப்படும். வரும் 15ம் தேதி பூடானின் திம்புவில் நடைபெறும் விழாவில் இந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படும்.

இதன்படி இந்தியா மற்றும் இந்த நாடுகளுக்கு இடையே பயணிகள் போக்குவரத்து, தனிநபர்பயணம் மற்றும் சரக்கு போக்குவரத்துக்கு இருந்த தடைகள் நீங்கும். தாராள போக்குவரத்தை நடைபெறும். இதனால் நான்கு நாட்டுமக்களும் பயனடைவார்கள். நான்கு நாடுகளின் பொருளாதாரமும் முன்னேற்றம் அடையும். இவ்வாறு நிதின் கட்கரி தெரிவித்தார்.

Tags:

Leave a Reply