அனைவருக்கும் வீட்டுவசதி'த் திட்டத்தை செயல்படுத்தும் போது, உள்ளூர் சூழல் மற்றும் மக்களின் பழக்க, வழக்கங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும்வகையில் அதிகாரிகள் நெகிழ்வுத் தன்மையுடன் செயல்பட வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.

இது குறித்து அவரது அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது; அனைவருக்கும் வீட்டுவசதித் திட்டத்தைச் செயல்படுத்தும் போது, உள்ளூர் கட்டுமானப் பொருள்களைப் பயன் படுத்துவதுடன், உள்ளூர் மக்களின் பழக்க, வழக்கங்கள், வாழ்வியல் முறை உள்ளிட்ட வற்றுக்கு அதிகாரிகள் முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

செங்கல், சிமென்ட் கலவைகளை தவிர்த்து விட்டு, பாரம்பரியப் பொருள்களைப் பயன்படுத்திக் கட்டப்படும் வீட்டைத் தான் பழங்குடியினத்தைச் சேர்ந்தவர்கள் விரும்புவர்.

கிராமப்புறங்களைப் பொருத்தவரையில், "கிராமம் – கிராமமாக' இந்தத்திட்டத்தைச் செயல்படுத்தினால் தான் இலக்கை அடைய முடியும்.

வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது அனைத்து அடிப்படை வசதிகள், தேவையான இணைப்பு வசதிகள் உள்ளிட்டவற்றைச் செய்துகொடுக்க வேண்டும்.

அப்படி செய்தால் தான் "பிரச்னையில்லா கிராமம்' என்ற நிலையை அடைய முடியும்.
நகர்ப் புறங்களில் வீடுகளைக் கட்டிக் கொடுக்கும் போது, திடக் கழிவுகளில் இருந்து தயாரிக்கப்பட்ட செங்கல்களைப் பயன்படுத்தலாம்.

இயற்கைப் பேரிடர் நிகழ்வதற்கான ஆபத்துச்சூழல் நிறைந்த பகுதிகளில், அனைவருக்கும் வீடு திட்டத்தின்கீழ் புதிய வீடுகளைக் கட்டும் போது உரிய விதி முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும்.

"தூய்மை இந்தியா' குறித்து ஆன்மிகத் தலைவர்கள் மூலம் பொதுமக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்தலாம்
கழிப்பறைகளை கட்டாமலும், தூய்மையை கடைப்பிடிப்பதில் பின் தங்கிய நிலையிலும் உள்ள மாநிலங்களில் விழிப்புணர்வை ஏற்படுத்த அந்தமாநில அரசுகளுடன், மத்திய அரசுத்துறை அதிகாரிகள் ஒருங்கிணைந்து செயல்படவேண்டும்.

குறிப்பாக, கங்கை நதி கரையோரங்களில் கழிப்பறைகளை கட்டுவதற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.
தூய்மை குறித்து பொதுமக்களிடம் அடிப்படை விழிப்புணர்வை ஏற்படுத்துவதுடன், அவர்களது பழக்க வழக்கங்களிலும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த பிரசாரங்களில் ஆன்மிகத் தலைவர்களை ஈடுபடுத்தலாம்.

தூய்மையை கடைப்பிடிக்கும் ஊர்களுக்கு விருதுவழங்குவது உள்ளிட்ட ஊக்குவிப்பு நடவடிக்கைகளை அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும் என பிரதமர் தெரிவித்தார்.

Tags:

Leave a Reply