விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம்கோடி வட்டியில்லா கடன் வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

மத்திய உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பஸ்வான் பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:–

விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன்வழங்க ரூ.6 ஆயிரம் கோடி ஒதுக்கீடுசெய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 'வேளாண் கடன் வினியோக திட்டத்தின்' கீழ், வட்டியில்லாமல் கடன்பெறலாம். இந்த வட்டியை மத்திய அரசே ஏற்றுக்கொள்ளும்.

நிலம் கையகப்படுத்துதல் மசோதா, நில உரிமையாளர்களுக்கு வரப் பிரசாதமாக அமையும். நிலத்தை விற்பவர்களுக்கு சந்தை விலையை போல், 4 மடங்கு விலை அளிக்கப்படும். அந்த நிலங்களில் தொழிற்கூடங்கள் கட்டப்பட்டு, வேலைவாய்ப்பும் அளிக்கப்படும்.

நரேந்திர மோடி அரசை ஏழைகளுக்கு விரோத மானது என்று கூறுவது தவறு. இந்த ஆட்சியில்தான், ஜன்தன் யோஜனா, அடல் பென்சன் யோஜனா, பீமா யோஜனா, முத்ராவங்கி போன்ற திட்டங்கள் ஏழைகளுக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

அரிசி, கோதுமை, சர்க்கரை போன்ற அத்தியாவசிய பொருட்களின் விலை கட்டுப் படுத்தப்பட்டு உள்ளது. பருப்பு, சமையல் எண்ணெய் ஆகியவற்றின் விலை உயர்ந்துள்ளது உண்மை தான். இறக்குமதி மூலம், அதன் விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சியில் சிறுபான்மையினர் தாக்கப் படுவதாக கூறப்படுவது தவறு. எந்தமத கலவரமும் நடக்கவில்லை. சிறுபான்மையினர் பாதுகாப்பாக உள்ளனர். மோடி அரசை தாக்குவதற்காக, எதிர்க் கட்சிகள், தேவையின்றி மதவாத பிரச்சினையை கையில் எடுத்துள்ளன.

ஊழலற்ற, ஒளிவு மறைவற்ற அரசை அளித்து வருகிறோம். கருப்பு பணத்தை மீட்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது.

மத்திய–மாநில உறவு சுமுகமாக உள்ளது. மத்திய வரிவருவாயில் மாநிலங்களுக்கான பங்கை 32 சதவீதத்தில் இருந்து 42 சதவீதமாக உயர்த்துமாறு 14–வது நிதிகமிஷன் விடுத்த சிபாரிசை மத்திய அரசு ஏற்றுக் கொண்டுள்ளது.

பாக்கெட் உணவுபொருட்களில் கலப்படத்தை தடுக்க கலப்பட உணவுப்பொருள் தடைசட்டத்தில் முக்கிய திருத்தங்கள் கொண்டுவர மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. விரைவில் இதற்கான மசோதா தயாரிக்கப்பட உள்ளது இவ்வாறு ராம்விலாஸ் பஸ்வான் கூறினார்.

Tags:

Leave a Reply