கொலீஜியம்' முறையில் தகுதி யற்றவர்கள் நீதிபதிகளாக தேர்வு செய்யப்பட்டனர் என்று உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு கடுமையான வாதத்தை முன்வைத்துள்ளது.

அரசுத்தரப்பில் அட்டர்னி ஜெனரல் முகுல் ரோத்தகி ஆஜராகி, தனது வாதங்களை நிறைவு செய்தார். அவர் கூறியதாவது:

தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தின் மூலம் தகுதியற்ற நபர்கள் நீதிபதிகளாக நியமிக்கப்பட மாட்டார்கள் என உறுதியளிக்கிறேன். முன்பு இருந்த "கொலீஜியம்' முறையானது சிலநீதிபதிகளை பதவிக்கு கொண்டுவந்தது. அவர்கள் எந்த தீர்ப்பையும் வழங்க வில்லை. நான் யாருடைய பெயரையும் குறிப்பிட விரும்பவில்லை.

உயர் நீதி மன்றத்தில் நீதிபதியாக இருந்த ஒருவர் வெறும் 5 தீர்ப்புகளை மட்டுமே அளித்திருந்தார். அவர் உச்சநீதிமன்ற நீதிபதியானார்.

அவருக்கு கௌரவத்துக்கு மேல் கௌரவத்தை அளித்து உச்சநீதிமன்ற நீதிபதியாக்கியது "கொலீஜியம்' முறைதான். பின்னர் அவரை தேசியமனித உரிமை ஆணையத்துக்கு அனுப்பி வைத்தது. "கொலீஜியம்' முறையில் பரிந்துரைக்கப்பட்ட சிலர், நீதிபதிகளாக ஏற்று கொள்ளவே தகுதியற்றவர்கள்.

நீதிபதிகளாக நியமனம் பெறுபவர்களின் தரத்தை அறியும் உரிமை, வருமானவரி கட்டுவோருக்கு உண்டு. அரசுக்கு வரிசெலுத்துபவன் என்ற முறையில் நான் உங்களுக்கு (நீதிபதிகள்) ஊதியம் வழங்குகிறேன். எனவே யார் நீதிபதியாகப் போகிறார் என்பதைத் தெரிந்துகொள்ளும் உரிமை எனக்கு உள்ளது.

பல்வேறு உயர் நீதி மன்றங்களில் 15 ஆண்டுகள் பணியாற்றும் ஒருநீதிபதி, அந்தக் காலகட்டத்தில் 50 தீர்ப்புகளுக்கு மேல் அளித்திருக்கா விட்டால், அவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட முடியாது.

சட்டம்தொடர்பான ஆய்வின் அடிப்படையில், தேசிய நீதிபதிகள் நியமன ஆணைய சட்டமானது முழுக்க முழுக்க அரசியல் சாசன ரீதியிலானது என்பதை அடக்கத்தோடு தெரிவித்து கொள்கிறேன். அதன் செல்லத்தக்க தன்மையை இந்தநீதிமன்றம் உறுதிப்படுத்த வேண்டும் என்றார் ரோத்தகி.

Leave a Reply