பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த, 4,300 அகதிகளுக்கு, பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு, குடியுரிமை அளித்துள்ளது.

பாக்., ஆப்கன், வங்கதேசம் உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த, இரண்டுலட்சம் இந்துக்கள் மற்றும் சீக்கியர்கள், அகதிகளாக இந்தியாவந்து தங்கியுள்ளனர். இவர்களுக்கு இந்திய குடியுரிமை அளிக்கும் நடவடிக் கைகளில் மத்தியில் ஆளும், தேசிய ஜனநாயக கூட்டணி அரசு ஈடுபட்டுள்ளது.

முதற்கட்டமாக, கடந்த ஒருஆண்டில், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளில், 4,300 இந்துக்கள் மற்றும் சீக்கியர்களுக்கு, குடியுரிமை அளிக்கப் பட்டுள்ளது. ஆனால், கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசின் ஐந்து ஆண்டுகால ஆட்சியின் போது, வெறும் 1,023 பேருக்கு மட்டுமே

குடியுரிமை அளிக்கப்பட்டது. கடந்த பொது தேர்தலுக்கான பிரசாரத்தின் போது, 'இந்தியாவுக்கு வந்துள்ள அகதிகள் அனைவருக்கும், இந்தியா, இயற்கையான வீடு; வங்கதேசம், பாகிஸ்தானை சேர்ந்த இந்தியர்கள், பிற இந்திய குடிமக்களை போன்றே நடத்தப் படுவர்' என, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.

இந்நிலையில் தேர்தலில், பாஜக., தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு வென்று ஆட்சியமைத்த பின், உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், இந்தியாவில் தங்கியுள்ள அகதிகளுக்கு குடியுரிமை அளிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டார். அதன் படி, கடந்த ஒரு ஆண்டில் மட்டும், 4,300 பேருக்கு இந்திய குடியுரிமை அளிக்கப் பட்டுள்ளது.தவிர, மத்திய பிரதேசத்தில், 19 ஆயிரம் அகதிகளுக்கு நீண்டகால விசா வழங்கப்பட்டுள்ளது. ராஜஸ்தானில், 11 ஆயிரம் பேருக்கு நீண்டகால விசா தரப்பட்டுள்ளதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply