தஞ்சை மாவட்டம், கும்பகோணத்தில் பா.ஜ.க.,வின் 2 நாள் மாநில செயற்குழு கூட்டம் நேற்று தொடங்கியது. கூட்டத்திற்கு மாநிலத்தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் தலைமை தாங்கினார்.

கூட்டத்தில் மாநிலத் தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் பேசியதாவது: தமிழகத்தில் பா.ஜ.க. மாபெரும் சக்தியாக உருவாக இந்தகூட்டம் அமைந்துள்ளது. தமிழகத்தில் கடந்த 40 ஆண்டுகளாக ஏற்படாத ஒருமாற்றம், ஒருமலர்ச்சி இனி ஏற்பட போகிறது. 2 எம்.பி.க்களோடு இருந்த பாஜக. இன்று அறுதி பெரும்பான்மையோடு அகில இந்திய அளவில் பெரியகட்சியாக திகழ்கிறது.

இதேபோல தமிழகத்திலும் அந்நிலை ஏற்படும். அதற்கு அடித்தளம் அமைக்கும் கூட்டமாகதான் இந்த கூட்டம் திகழ்கிறது. இன்று அகில இந்திய அளவில், ஏன் உலகிலேயே 10½ கோடி உறுப்பினர்களை கொண்டகட்சி பா.ஜ.க. தான். இந்த கட்சியில் நாம் உறுப்பினர்களாக இருக்கிறோம் என்பதே பெருமைதான். இதுவரை தமிழகத்தில் ஆண்டகட்சியும், தேசிய கட்சியும்கூட உறுப்பினர்களை விரைவாக சேர்த்ததில்லை. பா.ஜ.க.வினர் ஒவ்வொருவரும் பாடுபட்டதன் விளைவாக தமிழகத்தில் 3 மாதங்களிலேயே 40 லட்சம் உறுப்பினர்களை நாம்சேர்த்துள்ளோம்.

வரும் காலத்தில் தமிழகத்தில் பாஜக. மாற்று சக்தியாக உருவாகும். கடந்த 2014ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை. ஆனால பாஜக. கூட்டணி 2 இடங்களில் வெற்றிபெற்றது. பாஜக.வினருக்கு கொள்கை உண்டு. தமிழக மக்கள் பாஜக.வை நம்புகின்றனர். அதற்கு ஏற்றார்போல் நாம் செயல்பட வேண்டும். பாஜக.வின் கொள்கைக்காக பலர் உயிர் இழந்துள்ளனர்.

2016ல் நாம் ஆளும் கட்சியாக இருக்கபோகிறோம். தமிழகத்தை பாஜக.வால் மட்டுமே காப்பாற்ற முடியும். அந்த நம்பிக்கையை நாம் அளித்தால், மக்கள் நம்பக்கம் திரும்புவார்கள். தமிழகத்தில் ஒரு வெற்று இடம் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றனர். அந்த இடத்தை பாஜக. வெற்றி இடமாகமாற்றும். அதற்காக நாம் அனைவரும் கடுமையாக உழைக்கவேண்டும். நாம் மிகப் பெரிய பலம் பொருந்திய கட்சியாக மாறவேண்டும். அதற்கு மக்கள் பிரச்சினையை முன்னெடுத்து செயல்பட வேண்டும் இவ்வாறு அவர் பேசினார்.

Tags:

Leave a Reply