அனைவருக்கும் வீடுகட்டி கொடுக்கும் திட்டத்தை மத்திய அரசு நேற்று தொடங்கியது. நகர்ப்புற ஏழைகள் வீடு கட்டுவதற்கான வட்டி மானியத்தை 6.5 சதவீதமாக உயர்த்தவும், தனி வீடு கட்டினால் அல்லது ஏற்கனவே வைத்துள்ள வீட்டை மேம்படுத்தினால் ரூ.1.5 லட்சம் நிதியுதவி அளிக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. மத்தியில் கடந்தாண்டு பொறுப்பேற்ற பா.ஜ அரசு 2022ம்

ஆண்டுக்குள் அனைவருக்கும் சொந்த வீடு கட்டி கொடுக்கப்படும் என பட்ஜெட்டில் அறிவித்தது. இதற்கான திட்டங்களை வகுக்க அமைச்சகங்களுக்கு இடையேயான குழு ஒன்றும் அமைக்கப்பட்டது. இந்த குழு மத்திய அரசிடம் சில பரிந்துரைகளை தாக்கல் செய்தது. இவற்றை பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஏற்றுக் கொண்டுள்ளது. இதன் முக்கிய அம்சங்ள்:

* குடிசை வாசிகள், குறைந்த வருவாய் பிரிவினர் உட்பட பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ள மக்களுக்கு வீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்தை 6.5 சதவீதமாக உயர்த்த பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. இது குறித்து வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற ஏழ்மை ஒழிப்புத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ''தற்போது வீட்டுக் கடனுக்கு 10.5 சதவீத வட்டி வசூலிக்கப்படுகிறது. இதன் மூலம் ஒருவர் 15 ஆண்டுகளுக்குள் திருப்பிச் செலுத்தும் ரூ.6 லட்சம் மதிப்பிலான வீட்டு கடனுக்கு ஒருவர் ரூ.6,632 மாத தவணை செலுத்துகிறார்.

மத்திய அரசின் 6.5 சதவீத வட்டி மானியம் கிடைத்தால், இந்த தவணை தொகை ரூ.4,050 ஆக குறையும். இதனால் ஒருவருக்கு மாதம் ரூ.2,582 மிச்சமாகும். மொத்தத்தில் பயனாளி ஒருவருக்கு ரூ.1 லட்சம் முதல் ரூ.2.30 லட்சம் வரை மத்திய அரசின் உதவி கிடைக்கும். நகர்ப்புறங்களில் அடுத்த 7 ஆண்டுக்குள் 2 கோடி புதிய வீடுகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளன.

* இத்திட்டத்தின் 2வது பிரிவில், தனியார் பங்களிப்புடன் கூடிய குடிசை மாற்று வீட்டு வசதி திட்டங்களுக்கு பயனாளி ஒருவருக்கு மத்திய அரசு ரூ.1 லட்சம் நிதி அளிக்கும். இந்த நிதியை மாநில அரசுகள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் தனியார் பங்களிப்புடன் கூடிய குடிசை மாற்று வீடுகள் கட்டும் திட்டத்துக்கு பயன்படுத்திக் கொள்ளலாம்.

* 3வது பிரிவின்கீழ் நகர்ப்புறங்களில் உள்ள ஏழைகளுக்கு பொதுத்துறை மற்றும் தனியார் பங்களிப்புடன் கட்டப்படும் சிறிய வீடுகளுக்கு பயணாளி ஒருவருக்கு மத்திய அரசு ரூ.1.50 லட்சம் நிதியுதவி அளிக்கும். இவ்வாறு கட்டப்படும் வீடுகளில் 35 சதவீதத்தை பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்கு ஒதுக்க வேண்டும்.

* 4வது பிரிவில் பயனாளி ஒருவர் தனியாக வீடு கட்டினால் அல்லது ஏற்கனவே வைத்திருக்கும் வீட்டை மேம்படுத்தினால் அவருக்கு ரூ.1.5 லட்சம் நிதியுதவி வழங்கப்படும். பொருளாதாரத்தில் பின்தங்கியுள்ளவர்களுக்காக கட்டப்படும் இந்த வீட்டு வசதி திட்டங்களுக்கு தேவையான அனுமதி உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் புதுமையான வழிமுறைகளை பின்பற்றி மாநில அரசுகளும், யூனியன் பிரதேசங்களும் செய்து கொடுக்க வேண்டும் என மத்திய அரசு ஆலோசனை வழங்கியுள்ளது. இந்த நகர்ப்புற வீட்டு வசதி திட்டம் நாடு முழுவதும் 4,041 நகரங்களில் மேற்கொள்ளப்படவுள்து. தொடக்கத்தில் ஒரு லட்சம் மற்றும் அதற்கு மேல் மக்கள் ெதாகையுள்ள 500 நகரங்களில் இந்த வீட்டு வசதி திட்டம் தொடங்கப்படும்.

2015-2017ம் ஆண்டில் முதல் கட்டமாக 100 நகரஙகளில் வீடு கட்டப்படும். 2வது கட்டமாக 2017-2019ம் ஆண்டில் 200 நகரங்களில் வீடு கட்டப்படும். மீத வீடுகள் 2019-22ம் ஆண்டுகளில் கட்டப்படும். இந்த வீடுகளுக்கான வட்டி மானியம் நடப்பாண்டு முதல் அமல்படுத்தப்படும். நகர்ப்புறங்களில் கட்டப்படும் இந்த வீட்டு வசதி திட்டங்களில் 30 சதுர மீட்டர் அளவுக்கு கார்பட் ஏரியா, குடி நீர், கழிவுநீர், சாலைகள், மின்சாரம், டெலிபோன் லைன், சமுதாயக் கூடம், பூங்கா, விளையாட்டு மைதானம் போன்றவை அமைக்க வேண்டும். இந்த வீடுகள் அனைத்தும் குடும்பத் தலைவி அல்லது கணவன்-மனைவி இருவரது பெயர்களையும் சேர்த்தே பத்திரப் பதிவு செய்ய முடியும்.

Tags:

Leave a Reply