சர்வதேச யோகாதின கொண்டாட்டம், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் டெல்லியில் நடைபெறுகிறது. மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட்டு யோகாதின கொண்டாட்ட ஏற்பாடுகளை கவனித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம், முதல் முறையாக ஐ.நா.வில் உரையாற்றிய பிரதமர் நரேந்திரமோடி, "இந்தியாவின் பாரம்பரிய கலையான யோகா பற்றிய விழிப்புணர்வை உலகம் முழுவதும் ஏற்படுத்த வேண்டும். உடலையும் மனதையும் ஒழுங்குப்படுத்தும் யோகாவுக்கு முக்கியத்துவம் தரவேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார். பிரதமர் மோடியின் கோரிக்கையை ஏற்று, ஜூன் 21-ம் தேதியை சர்வதேச யோகாதினமாக ஐ.நா. அறிவித்தது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இதுதொடர்பான தீர்மானத்துக்கு ஐ.நா.வில் 177 நாடுகள் ஆதரவு அளித்தன.

அதன்படி, சர்வதேச யோகாதினம் உலகம் முழுவதும் நாளை கொண்டாடப் படுகிறது. இந்தியாவில் இதற்கான ஏற்பாடுகள் மும் முரமாக நடந்து வருகின்றன.

தலைநகர் டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் நாளை யோகாதினம் கொண்டாடப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தவிர லக்னோ, கொல்கத்தா, பாட்னா ஆகிய நகரங்களிலும் யோகா தினத்தை விமரிசையாக கொண்டாட ஏற்பாடு செய்யப் பட்டுள்ளது. மாநிலங்களில் மத்திய அமைச்சர்கள் முகாமிட் டுள்ளனர்.

நியூயார்க்கில் உள்ள ஐ.நா. தலைமையகத்தில் நடைபெறும் யோகாதின விழாவில், வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்கிறார். மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத்சிங், உத்தரப் பிரதேச தலைநகர் லக்னோ நிகழ்ச்சியில் கலந்து கொள்கிறார்.

சென்னையில் 30 ஆயிரம்பேர் பங்கேற்கும் யோகா தின விழாவில், மத்திய நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு கலந்துகொள்கிறார். சுற்றுலாத் துறை அமைச்சர் மகேஷ் சர்மா தனது சொந்த தொகுதியான நொய்டாவில் நடைபெறும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்.

திருவனந்தபுரம் நிகழ்ச்சியில் மத்தியசட்ட அமைச்சர் சதானந்த கவுடாவும், ஐதராபாத் விழாவில் சுகாதார அமைச்சர் ஜே.பி.நட்டாவும் பங்கேற்கின்றனர். மீரட் நிகழ்ச்சியில் பாதுகாப்புத்துறை அமைச்சர் மனோகர் பாரிக்கர், பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தனது சொந்த தொகுதியான பிலிபித்தில் நடைபெறும் நிகழ்ச்சியிலும் கலந்து கொள்கின்றனர். இதேபோல் மற்ற மத்திய அமைச்சர்களும் பல மாநிலங்களில் நடைபெறும் யோகாதின நிகழ்ச்சிகளுக்குத் தலைமை வகிக்கின்றனர்.

டெல்லி ராஜ்பாத் சாலையில் சர்வதேச யோகா தினத்தை பிரம்மாண்டமாக கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் உயரதிகாரிகள்,ராணுவ அதிகாரிகள், தூதர்கள் உட்பட 35 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்பார்கள் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.