முதல் சர்வதேச யோகா தினம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப் படுவதையொட்டி, டெல்லியில் பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் யோகா தின நிகழ்ச்சி பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில், 35,000-க்கும் அதிகமானோர் பங்கேற்றனர்.

சர்வதேச யோகா தினத்தை அதிகார பூர்வமாக்கிய ஐக்கிய நாடுகள் அமைப்புக்கு நன்றிதெரிவித்த பிரதமர் மோடி, மக்களுடன் இணைந்து யோகா செய்தார். இந்த தினத்தையொட்டி, மேடையில் பேசுவார் என்று மட்டும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவரே யோகா செய்தது குறிப்பிடத்தக்கது.

யோகா குரு ராம்தேவ், யோகா ஆசிரியர்கள் மோடியுடன் மேடையில் இருந்தனர். சிறிதுநேரத்தில் மேடையிலிருந்து கீழே வந்து மக்களோடு சேர்ந்து மோடியும் 30 நிமிடங்கள் யோக பயிற்சிசெய்தார்.

நிகழ்ச்சியை தொடங்கி வைத்த நரேந்திர மோடி, "இது மக்களை உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் வலிமைப்படுத்தவே ஆரம்பிக்கப்பட்டது. உலகத்தை பதற்றமில்லாத இடமாக மாற்றவும், நல்லிணக்கம் ஏற்படவும் யோகா உதவிசெய்யும்.

யோகா வெறும் உடல் வலிமைக்காக மட்டுமல்ல. அப்படி எண்ணுவது பெரியதவறு. அவ்வாறாக இருப்பின் சர்க்கஸில் வேலைசெய்யும் அனைவரும் யோகிகள் என அழைக்கப்படுவார்கள். உடலை இலகுவாக ஆக்குவது மட்டும் யோகாவின் வேலையல்ல.

இப்போது நாம் இந்நிகழ்ச்சியை கொண்டாடுவதோடு மனிதனின் மனதை பயிற்றுவிக்கிறோம். அமைதி மற்றும் நல்லிணக்கத்தின் புதியசகாப்தத்தை தொடங்குகிறோம். இதுதொடர்ந்து நடக்கும். இது மனித குலத்துக்கான நிகழ்ச்சி. நல்லிணக்கத்தை பரப்ப, பதற்றம் இல்லாத உலகை உருவாக்கும் முயற்சி" என்றார் மோடி.

டெல்லி ராஜபாதையில் 35 நிமிடம் யோகாநிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் , மத்திய அமைச்சர்கள், எம்.பி.க்கள், ஆயிரக்கணக்கான யோகா பயிற்சியாளர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். இன்று காலை 7 மணிக்கு நிகழ்ச்சிதொடங்கியது. இந்நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான அதிகாரிகள், 5,000 மாணவ, மாணவிகள் யோகா பயிற்சிசெய்தனர்.

இந்த ஏற்பாடுகள் அனைத்தையும் புதிதாக தொடங்கப்பட்டுள்ள மத்திய 'ஆயுஷ்' அமைச்சகம் செய்துள்ளது. இந்நிகழ்ச்சியில் 35 ஆயிரத்துக்கும் அதிகமானோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் பங்கேற்க 152 வெளிநாட்டு தூதரகங்களின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அவர்களும் பங்கேற்றனர்.

இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றதால், இதை ஒருங்கிணைத்து நடத்தும் ஆயுஷ் அமைச்சகம், இந்த நிகழ்வை கின்னஸ் உலகசாதனையாக மாற்ற திட்டமிட்டது.

யோகா நிகழ்ச்சியை பொதுமக்கள் பார்க்க வசதியாக ராஜ பாதை நெடுகிலும் பெரியளவில் 2,000 டிஜிட்டல் திரைகளை அமைத்தது அரசு.

யோகா நிகழ்ச்சி லக்னோ, கொல்கத்தா, பாட்னா உள்ளிட்ட இடங்களிலும் நடைபெற்றன. இவை தூர்தர்ஷனிலும் இணையதளத்திலும் நேரலையாக ஒளிபரப்பப்பட்டன.

முன்னதாக, யோகாதின கொண்டாட்டத்தை முன்னிட்டு ராஜபாதை பகுதியில் போக்குவரத்து கடந்த 14-ம் தேதியே மாற்றப்பட்டது. அதன்படி ராஜபாதையில் போக்குவரத்து தடைசெய்யப்பட்டது. அதன்பின், தினந்தோறும் அங்கு யோகா ஒத்திகை நிகழ்ச்சிகள் நடைபெற்று வந்தன.

Leave a Reply