சர்வதேச யோகா தினத்தை ஐக்கிய நாடுகள் சபை கடைப்பிடிக்க வேண்டும் என இந்தியா முன்மொழிந்த போது, அதை 177 நாடுகள் ஆதரித்தன. அந்த நாடுகளுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

பலருக்கும் யோகா கலை உடற்பயிற்சியாகத் தோன்றலாம். அவ்வாறு கருதுவது மிகப்பெரிய தவறு. உடலை வளைக்கும் யோகா, ஓர் உடற்பயிற்சி என்றால் சர்க்கஸ் கூடாரங்களில் வேலை செய்யும் சிறார்கள்கூட யோகா குருக்கள்தானே. உடலை வளைப்பது மட்டுமே யோகாவின் நோக்கமில்லை. மனித குலம் ஒவ்வொரு கட்டத்திலும் முன்னேறும்போது, அதற்கு இணையாக தனி மனிதனும் வளர்ச்சி பெற வேண்டும்.

அதற்கான பதில் யோகாவில் மட்டுமே உள்ளது. மனித குல வளர்ச்சிக்கும், தனிமனித வாழ்வுக்கும் இடையிலான நெருக்கடிகளை களைய, உள்ளத் தெளிவை மனிதன் பெற வேண்டும். இதை கருத்தில் கொண்டே நமது முன்னோர்கள் பாரம்பரிய யோகா கலையை நமக்கு விட்டுச் சென்றனர். ஆனால் நம்மில் பலர் அதை அலட்சியத்தால் உதாசீனப்படுத்தி விட்டோம்.

அன்பு, வாழ்வியல் வளம் ஆகியவற்றைப் பரப்பவும். பதற்றமான உலகில் இணக்கத்தை ஏற்படுத்தவும், நம்மிடம் உள்ள பேராசை, வன்முறை, சண்டை, சச்சரவுகள் போன்றவற்றை விட்டொழிக்கவும். சிறந்த உடல்நலத்தை பேணவும், குழு மனப்பான்மையை வளர்த்துக் கொள்ளவும், சீரான சூழலை உருவாக்கவும் சிறந்த வழிதான் யோகா இது விற்பனை பொருள் அல்ல. இது ஒரு கம்பெனியின் 'பிராண்ட்' அல்ல.

இது தனிப்பட்ட ஒருவருக்கோ, ஒரு சமூகத்துக்கோ அல்லது ஒரு நாட்டுக்கோ சொந்தமானதும் அல்ல. இது உலக மக்களுக்கானது. இதை விற்பனை பொருளாக்கி விடாதீர்கள். அப்படி செய்தால், யோகாவுக்கு மிகப்பெரும் தீங்கு ஏற்பட்டு விடும்.

கடந்த 50 ஆண்டுகளுக்கு முன்பெல்லாம், 'தூய்மையான நெய்' என்ற விளம்பரங்கள் இல்லை. இப்போது இருக்கிறது. ஏனெனில் அங்கு பணம் இருக்கிறது. வர்த்தகமாகி விட்டது. யோகா விஷயத்தில் இதுபோல் ஆகிவிட கூடாது. 'நான் சொல்லி தரும் யோகாதான் சிறந்தது. மற்றதெல்லாம் வீணானது' என்ற சொற்களை நாம் கேட்கும் நிலை வந்துவிடக் கூடாது.

இப்போது நாம் தொடங்கியுள்ள யோகா விழிப்புணர்வு செய்தி உலகம் முழுவதும் பரவ வேண்டும். தில்லி ராஜபாதை யோகா பாதையாக மாறும் என நாம் இதற்கு முன் நினைத்திருப்போமா? இந்த யோகா தினம் ஒரு கொண்டாட்டம் மட்டுமில்லை. உலக அமைதி, நல்லிணக்கத்தை நோக்கிய புதிய சகாப்தம்.

Leave a Reply