ஆர்கே.நகர் சட்டமன்ற தொகுதியின் இடைத்தேர்தல் முடிந்தவுடன், சென்னையில் மெட்ரோ ரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும் என மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஓர்ஆண்டு சாதனை விளக்கக்கூட்டம் சென்னையில் நடந்தது. இந்தகூட்டத்தில் மத்திய பாராளுமன்ற விவகாரத்துறை மந்திரி வெங்கையாநாயுடு பேசியதாவது:-

இந்த நிகழ்ச்சி பாஜக.வின் நிகழ்ச்சி அல்ல. பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான மத்திய அரசு இதுவரை மேற்கொண்டுள்ள பணிகளை அறிக்கையாக பொது மக்கள் முன்பு சமர்ப்பிக்கும் நிகழ்ச்சியாகும். ஊடகங்கள் எல்லாம் மோடியின் ஆட்சி, தொழிலதிபர்களுக்கு ஆதரவான ஆட்சி என்று விமர்ச்சிக்கின்றன. தொழில்வளர்ச்சி, நிதிவளர்ச்சி, வேலை வாய்ப்பு அதிகரிப்பு ஆகியவைதான் நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதார வளர்ச்சியை ஏற்படுத்துகிறது.

இதற்கு முந்தைய ஆட்சியில் நிர்வாக திறமைகொண்ட தலைமை இல்லை. இதனால், அரசுமீது மக்கள் நம்பிக்கையை இழந்துவிட்டனர். இந்திய தொழிலதிபர்கள் எல்லாரும் வெளிநாடுகளில் முதலீடு செய்ய தொடங்கிவிட்டனர். ஊழல் ஒட்டுமொத்த அரசு எந்திரத்தை சீர்குலைத்து விட்டது. இலங்கை, சீனா உள்ளிட்ட அண்டை நாடுகளுடன் நல்லஉறவு இல்லை. நரேந்திரமோடி ஆட்சிக்கு வந்தபின்னர், இவற்றை எல்லாம் சரி செய்தார். உலக நாடுகள் மத்தியில் இந்தியாவுக்கு மரியாதையும், மதிப்பும் ஏற்பட்டுள்ளது.

இந்தியாவில் 16 அணுஉலைகளை உருவாக்க அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 5 ஆண்டுகளுக்கு யுரேனியத்தை வழங்க கனடாவும், ரூ.1 லட்சத்து 40 ஆயிரம் கோடியை இந்தியாவில் முதலீடுசெய்ய சீனாவும் முன்வந்துள்ளது. இந்தியாவில் முதலீடுகளை செய்ய உலக நாடுகள் ஆர்வம் காட்டுகின்றன.

நரேந்திரமோடி ஆட்சிக்குவந்த பின்னர், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி 4.6 சதவீதத்தில் இருந்து 7.3 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதேவேகத்தில் இந்தியா முன்னேறினால், 3 அல்லது 4 ஆண்டுகளில் சீனாவை இந்தியா மிஞ்சி விடும் என்று உலகவங்கியே கருத்து தெரிவித்துள்ளது.

மேலும், நிலம் கையகப் படுத்தும் சட்டம் அமலுக்கு வந்தால், பொதுமக்கள் நிலம் எல்லாம் பறிபோகும் என்றும் அந்தநிலங்கள் எல்லாம் தொழிலதிபர்களுக்கு வழங்கப்பட்டுவிடும் என்று தவறான தகவல் பரப்புகின்றனர். அப்படி ஒரு எண்ணம் மத்தியரசுக்கு கிடையாது என்று உறுதியளிக்கிறேன்.

தற்போது சென்னையில் மெட்ரோரெயில் திட்டத்தின் முதல் கட்டப்பணி முடிவடைந்து விட்டது. ஆர்.கே.நகர் தொகுதிக்கு இடைத் தேர்தல் நடைபெறுவதால், சென்னையில் தேர்தல் நடத்தை விதி அமலில்உள்ளது. எனவே, இடைத்தேர்தல் முடிந்ததும், மெட்ரோரெயில் சேவை தொடங்கி வைக்கப்படும். விரைவில் மெட்ரோரெயில் சென்னையில் ஒரு பகுதியில் ஓடத் தொடங்கும் இவ்வாறு வெங்கையா நாயுடு பேசினார்.

Leave a Reply