ஐபிஎல். கிரிக்கெட்தொடரின் நிதி முறைகேடு புகார்களில், அதன் முன்னாள் ஆணையர் லலித்மோடியின் தொடர்புகுறித்த கூடுதல் விவரங்களை அளிக்குமாறு அமலாக்க துறை உள்ளிட்ட விசாரணைக் குழுக்களுக்கு கருப்புப் பண விசாரணைக்கான சிறப்பு புலனாய்வு குழு (எஸ்ஐடி.) உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து மத்திய அரசு வட்டாரங்கள் கூறியதாவது:

கருப்புப்பணம் தொடர்பான புகார்களை அமலாக்க துறை, வருமான வரித்துறை, நிதி புலனாய்வு குழு ஆகியவை விசாரித்து வருகின்றன. இந்நிலையில், சிறப்புப் புலனாய்வுக் குழுவின் ஆய்வுக் குழுக் கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இதில், அமலாக்க துறை, வருமான வரித்துறை, மத்தியப் புலனாய்வுத் துறை (சிபிஐ), மத்திய நேரடிவரிகள் வாரியம், நிதியமைச்சகம் ஆகியவற்றின் அதிகாரிகள் கலந்துகொண்டனர்.

ஐபிஎல். கிரிக்கெட் தொடரில் நடைபெற்றதாக கூறப்படும் நிதிமுறைகேடு புகார்களில், லலித் மோடியின் தொடர்புகுறித்த விவரங்களை ஒவ்வொரு விசாரணை அமைப்பும் தனித்தனியாக அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் சிறப்புப் புலனாய்வுக் குழு உத்தரவிட்டது.

மேலும், முந்தைய ஐ.பி.எல். தொடர்களில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள், தனிநபர்கள் ஆகியோருக்கு உள்ள தொடர்புகள் குறித்து தெரிவிக்கவேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply