நவீன நகரங்கள்' திட்டத்தின்கீழ் தமிழகத்தில் 12 நகரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன; மேலும், ஒரு லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை உள்ள நகரங்களை புனரமைப்பதற்கான "அடல்' திட்டத்துக்காக தமிழகத்தில் 33 நகரங்கள் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன என்று மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்தன.

மத்திய அரசின் முக்கிய நகர்ப்புற திட்டங்களான நவீனநகரங்கள் திட்டம், நகரங்கள் புனரமைப்புக்கான அடல்திட்டம் ஆகியவற்றைச் செயல்படுத்து வதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை, பிரதமர் நரேந்திர மோடி தில்லியில் வியாழக் கிழமை வெளியிட உள்ளார்.

இந்நிலையில், இவ்விரு திட்டங்களை செயல்படுத்த, மாநில வாரியாகத் தேர்வு செய்யப்பட்டுள்ள நகரங்கள் தொடர்பாக, மத்திய நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சக வட்டாரங்கள் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

நவீன நகரங்கள் திட்டத்தின்கீழ், அதிக பட்சமாக உ.பி.,யில் 13 நகரங்களும், இதற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் 12 நகரங்களும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. மகாராஷ்டிரத்தில் 10 நகரங்களும், குஜராத் மற்றும் கர்நாடகத்தில் தலா 6 நகரங்களும், மேற்கு வங்கம், ராஜஸ்தானில் தலா 4 நகரங்களும் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

பிகார், ஆந்திரம், பஞ்சாப் உள்ளிட்ட மாநிலங்களில் தலா 3 நகரங்களும், தில்லி, ஜம்முகாஷ்மீர், கேரளம், அஸ்ஸாம் உள்ளிட்ட 8 மாநிலங்களில் தலா ஒருநகரும் தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன.

இந்த 100 நகரங்களும், பல்வேறு காரணிகள் அடிப்படையில் தரவரிசைப் படுத்தப்படும். தரவரிசையில் முதல் 20 இடங்களில் வரும் நகரங்களில் இந்த திட்டத்தைச் செயல்படுத்து வதற்கான நிதி, நிகழ் நிதியாண்டிலேயே வழங்கப்படும்.

தரவரிசையில் அடுத்துள்ள 40 நகரங்களுக்கு அடுத்த நிதியாண்டிலும், மீதமுள்ள 40 நகரங்களுக்கு 2017-18-ம் நிதியாண்டிலும் நிதி ஒதுக்கப்படும்.

அடல்திட்டம்: நாடு முழுவதும் ஒருலட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை கொண்ட தேர்ந்தெடுக்கப்பட்ட 500 நகரங்களை புனரமைப்பதற்கான அடல் திட்டத்தின் கீழ், அதிகபட்சமாக உத்தரப் பிரதேச மாநிலத்தில் 54 நகரங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன.

அடுத்தபடியாக, மகாராஷ்டிரத்தில் 37 நகரங்களும், தமிழகத்தில் 33 நகரங்களும் இந்த திட்டத்துக்காக தேர்ந்தெடுக்கப் பட்டுள்ளன. குஜராத், கர்நாடகம் ஆகிய மாநிலங்களில் முறையே 31, 21 நகரங்கள் தேர்வு செய்யப் பட்டுள்ளன.

சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த நகரங்கள், மலைநகரங்கள், தீவுநகரங்கள், கங்கை நதியை ஒட்டியுள்ள நகரங்கள் போன்றவற்றில், மக்கள் தொகை ஒருலட்சத்துக்கு குறைவாக இருந்தாலும் அவையும் இந்தத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளன.

Leave a Reply