வெளிநாட்டில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தை மீட்டு நாட்டின் ஒவ்வொரு குடிமகனின் கணக்கிலும் ரூ.15 லட்சம் போடப் படும் என்று மோடி எப்போது, எங்கே வாக்குறுதி தந்தார் என்று பிஹார் பாஜக தலைவர் சுஷில்குமார் மோடி நிதிஷ் குமாரிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாட்னாவில் உள்ளூர் நாளிதழ் ஒன்று ஏற்பாடுசெய்திருந்த இந்துஸ்தான் சமகம் என்ற நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராம் விலாஸ் பாஸ்வானுடன் மேடையைப் பகிர்ந்துகொண்ட சுஷில் குமார் மோடி கூறியதாவது:

"பிரதமர் மோடி கருப்பு பணத்தை மீட்டு நாட்டின் ஒவ்வொருவர் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யப் படும் என்று எப்போது கூறினார் என்று நிதிஷ்குமார் நிரூபிக்க முடியுமா என்று சவால் விடுக்கிறேன்.

வெளிநாட்டில் பதுக்கப் பட்டுள்ள கருப்பு பணத்தை மீட்டால் கிராமங்களை இணைக்க சாலை வசதிகள் செய்யப்படும், குழாய்கள் அமைக்கப்படும் என்றும் அனைவருக்கும் அடிப்படைவசதிகள் செய்துதர முடியும் என்றுதான் பிரதமர் கூறினார்.

இப்படியிருக்க நிதிஷ்குமார், பிரதமர் மோடியின் வாக்குறுதியை தொடர்ந்து திசை திருப்பி வருவதோடு, திரும்ப திரும்ப அதையே பேசிவருகிறார். பிரதமர் மோடியின் வாக்குறுதி மீது தப்பிதத்தை ஏற்றி உரைக்கிறார் நிதிஷ்குமார்.

லாலுவின் 'காட்டாட்சியை' நிறுத்துவதற்காகவே நிதிஷ் குமாருக்கு மக்கள் வாக்களித்தனர். ஆனால் அவரோ நரேந்திரமோடியை எதிர்ப்பதையே ஒரு குறிக்கோளாக கொண்டு லாலுவுடன் கைகோர்க்கிறார். மக்கள் இவற்றை யெல்லாம் அறிவார்கள். ஏன் நம்பிக்கை துரோகம் இழைத்தார் நிதிஷ் என்று மக்கள் கேட்கத்தான் போகிறார்கள்" என்றார் சுஷில்குமார் மோடி

Leave a Reply