நாடுமுழுவதும் 100 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கும் திட்டத்தை பிரதமர் நரேந்திரமோடி இன்று (வியாழக் கிழமை) தொடங்கி வைத்தார்.

100 'ஸ்மார்ட் நகரங்கள்' அமைக்கப்படும் என்று கடந்த பிப்ரவரியில் தாக்கல்செய்யப்பட்ட மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி சர்வதேசதரத்துக்கு இணையாக ரூ.48 ஆயிரம் கோடி செலவில் 100 ஸ்மார்ட் நகரங்களை உருவாக்கவும் ரூ.50 ஆயிரம் கோடியில் 500 நகரங்களை அனைத்துவசதிகளுடன் புதுப்பிக்கவும் மத்திய அமைச்சரவை அண்மையில் அனுமதிவழங்கியது.

இவைதவிர அனைவருக்கும் வீடுதிட்டத்தில் வரும் 2022-ம் ஆண்டுக்குள் நாடு முழுவதும் 2 கோடி புதிய வீடுகள் கட்டிக் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த மூன்று திட்டங்களையும் பிரதமர் மோடி டெல்லியில் இன்று தொடங்கிவைத்தார்.

இந்த 3 திட்டங்களையும் நிறைவேற்றுவதில் மாநில அரசுகளும், உள்ளாட்சி அமைப்புகளும் பெரும்பங்கு வகிக்க உள்ளன. இத்திட்டங்களில் தனியாரின் பங்களிப்பும் இடம்பெறும். அதிக பட்சமாக உத்தரப்பிரதேசத்தில் 13 ஸ்மார்ட் நகரங்கள் அமைக்கப்பட உள்ளன.

உத்தரப் பிரதேசத்தை அடுத்து தமிழகத்தில் 12 ஸ்மார்ட் நகரங்கள் உருவாக்கப்பட உள்ளன. மேலும் அடல்நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 33 நகரங்கள் மேம்படுத்தப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply