கன்னியாகுமரி தொகுதி எம்.பி.யும், மத்திய மந்திரியுமான பொன். ராதாகிருஷ்ணன் மாவட்டத்தில் வேலையில்லாத பட்டதாரி வாலிபர்களுக்கு வேலைவழங்க தனியார் வேலை வாய்ப்பு முகாமுக்கு ஏற்பாடுசெய்தார்.

இந்த முகாம் நாகர்கோவில் இந்துகல்லூரியில் நடந்தது. இதில் பங்கேற்க விரும்புபவர்கள் ஏற்கனவே தங்கள் பெயர் மற்றும் முகவரிகளை பதிவு செய்ய வேண்டும் என்று கூறப்பட்டிருந்தது.

ஆயிரக்கணக்கானோர் இம்முகாமில் பங்கேற்க பெயர் பதிவுசெய்து இருந்தனர். அவர்கள் அனைவரும் இந்து கல்லூரியில் குவிந்தனர். காலை 10 மணிக்கு முகாம் தொடங்கியது. 36 தனியார் நிறுவனங்களில் இருந்து அதிகாரிகள் வந்திருந்தனர். அவர்கள் தங்கள் நிறுவனங் களுக்கு தேவையான ஊழியர்களை தேர்ந்தெடுக்கும் பணியில் ஈடுபட்டனர்.

அலுவலக உதவியாளர் முதல் மானேஜர் வரை பல்வேறு பதவிகளுக்கு ஊழியர்கள் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

தேர்வுக்கு ஆண்களைவிட பெண்களே அதிகளவில் வந்திருந்தனர். ஏராளமானோர் கைக் குழந்தைகளையும் கொண்டு வந்திருந்தனர். இது போல இளம்பெண்களுடன் அவர்களின் பெற்றோரும் வந்திருந்தனர்.

இதனால் இந்துகல்லூரி வளாகம் கூட்டத்தால் நிரம்பிவழிந்தது. இதையொட்டி அங்கு கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. முகாமிற்கான ஏற்பாடுகளை பாஜக நிர்வாகிகள் கண்காணித்தனர். பிற்பகல் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் முகாமுக்கு வந்து ஊழியர்கள் தேர்வு செய்யப்படுவதை பார்வையிட்டு பேசும் போது குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க ஏற்பாடு நடந்து வருகிறது. குளச்சலில் துறைமுகம் அமைக்க ஆய்வுப்பணிகள் நடக்கிறது. துறைமுகம் அமைந்தால் மாவட்டம் தொழில் வளம் மிக்க மாவட்டமாக மாறும். பலருக்கும் வேலை கிடைக்கும் என்றார்.

Leave a Reply