பிரதமர் நரேந்திரமோடி கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஐ.நா. சபை பொதுமாநாட்டில் பேசும்போது சர்வதேச யோகா தினம் அறிவிக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதைத் தொடர்ந்து ஜூன் 21-ந் தேதி சர்வதேச யோகா தினமாக அறிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து மத்திய அரசு நேரடியாக நடத்திவரும் பள்ளிகளில் யோகாவை ஒருபாடமாக சேர்க்க உத்தரவிடப்பட்டது. அடுத்ததாக இப்போது 10 லட்சம்பேரை கொண்ட வலுவான மத்திய ஆயுதபோலீஸ் படையில் தினசரி யோகாபயிற்சி கட்டாயமாக்கப் பட்டுள்ளது.

எல்லை பாதுகாப்பு, தீவிரவாத இயக்கங்கள் செயல் படும் மாநிலங்களில் பணிபுரிவோர் உள்பட அனைவரும் அவர்கள் வழக்கமாக மேற்கொள்ளும் உடற் பயிற்சிகளுடன் இனி யோகாவும் சேர்த்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் மத்திய ஆயுதபோலீஸ் படைகளின் டைரக்டர் ஜெனரல்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதன்படி மத்திய ரிசர்வ் போலீஸ்படை, எல்லை பாதுகாப்புபடை, மத்திய தொழில் பாதுகாப்பு படை, இந்தோ-திபெத்தியன் எல்லை காவல்படை, சஷாஸ்டிரா சீமா பால், தேசிய பாதுகாப்பு படை மற்றும் அசாம் ரைபிள்ஸ் படை ஆகியவற்றுக்கு இந்த உத்தரவு அனுப்பப் பட்டுள்ளது.

மத்திய அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், ''யோகா இந்தியாவின் பழமையான பாரம்பரியம் வழங்கிய மதிப்பில்லாகொடை. தினசரி நடவடிக்கையின் ஒரு அங்கமாக அதனை ஏற்று பேணிக் காப்பதில் ஒவ்வொருவருக்கும் பொறுப்புள்ளது. அதன்படி காவல் படையினரின் தினசரி வழக்கமான பயிற்சிகளுடன் யோகாவையும் சேர்க்கவேண்டும். யோகாவுக்கு முன்னுரிமை வழங்குவதுடன், இது தொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அனுப்ப வேண்டும்'' என்று கூறப்பட்டுள்ளது.

Leave a Reply