மெட்ரோ இரயில் சேவை தமிழகத்தில் தொடங்கப்பட்டிருப்பது மகிழ்ச்சி. ஆனால் நிகழ்ச்சி நடைபெற்றதில் சில குறைபாடுகள் உள்ளது என்பதை சுட்டிக் காண்பித்திருந்தேன். ஆனால் அதற்கு அமைச்சர் தங்கமணி அவர்கள் தரம் தாழ்ந்த வார்த்தைகளால் பதிலளித்திருக்கிறார். நான் என்றுமே எனது

கருத்துக்களைத் தெரிவிக்கும் காலங்களில் என்றுமே வரம்பை மீறியது கிடையாது. ஆனால் அரைவேக்காட்டுத்தனமாக கருத்தைக் கூறுகிறார் என்று என்னை விமர்ச்சித்திருக்கிறார். நிறைவேக்காடாக தமிழகத்தில் ஆட்சி நடக்காத போது சுட்டிக்காட்டியிருக்கிறேனே தவிர வார்த்தையை சுட்டுக் காட்டியது கிடையாது.

தர்மபுரி மருத்துவமனையில் குழந்தைகள் இறப்பு தடுக்கப்பட வேண்டும் எனக் கூறியது அரைவேக்காட்டுத்தனமா? ஆவின் நிர்வாகத்தில் நடந்த ஊழலை எதிர்த்து குரல் கொடுத்ததும், பால் முகவர்களுக்கு சரியான விலைகொடுக்க வேண்டும் என்றதும் அரைவேக்காட்டுத்தனமா? நியாயமான அதிகாரிகள் சுதந்திரமாகச் செயல்பட முடியாமல் தற்கொலைக்கு தள்ளப்படுகிறார்கள் என்று சுட்டிக் காட்டியது அரை வேக்காட்டுத்தனமா? அரசாங்க மருத்துவமனைகள் மக்களின் அவரசத் தேவையைப் ப+ர்த்தி செய்ய வேண்டும் எனக் கூறியது அரைவேக்காட்டுத்தனமா? விவசாயிகளுக்கு சரியான இழப்பீடு கிடைக்க வேண்டும் என்று கூறியது அரைவேக்காட்டுத்தனமா? அ.தி.மு.க-வின் ஊதுகுழலாக இல்லாமல் ஊழலைச் சுட்டிக் காட்டியது அரைவேக்காட்டுத்தனமா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும் யார் அரை வேக்காட்டுத்தனமாகப் பேசுகிறார் என்பதை மக்கள் புரிந்து வைத்திருக்கிறார்கள்.

5 முறை முதலமைச்சராக பதவி பெற்றிருக்கும் முதலமைச்சருக்கு எல்லா நடைமுறைகளும் தெரியும் என்று அவர் கூறியிருப்பது சரி என்றால், விளம்பரங்களில் ஏன் பிரதமரின் படம் இடம் பெறவில்லை. எல்லா மக்கள் பிரதிநிதிகளையும் அழைத்து, அவர்கள் திட்டம் நிறைவேறியிருப்பதை கண்டு களிப்படையும் படி வழி நடத்தாமல் கானொலி காட்சி மூலம் அதுவும் உள்ளுரிலேயே இருந்து கொண்டு துவங்கியது சரியா? என்ற கேள்வியைப் பொதுமக்கள் கேட்கிறார்கள். தாமே துவங்க வேண்டும் என்ற காரணத்தினால் தாமதப்படுத்திய இத்திட்டத்திற்கு தமிழகத்தில் உள்ள மத்திய அமைச்சரையாவது அழைத்திருக்கலாமே?

5 முறை முதலமைச்சர் ஆனவருக்கு, ஜனநாயக நெறிமுறைகள் நன்றாகவே தெரியும் என்கிறார் அமைச்சர். சட்ட மன்றம்; நடைபெறும் விதமும், எதிர்க்கட்சிகள் குரல்வளை நெரிக்கப்படும் விதமும் ஜனநாயக நெறிமுறைகளை நன்றாவே உணர்த்துகிறது. ஆட்சியின் இலக்கணம் தெரியும் என்கிறார் அமைச்சர். ஆனால் இங்கு தேர்தல் இலக்கணம் மீறப்பட்டு வரலாற்று பிழைகள் ஏற்பட்டிருக்கின்றது என்பதை மக்கள் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதுமட்டுமல்ல 5 முறை முதலமைச்சராக இருந்த அனுபவம் வாய்ந்த அம்மாவை முதல் முறையாகத் தலைவர் ஆகியிருக்கும் தமிழிசை வாய்க்கு வந்ததைப் பேசக் கூடாது என்கிறார் அமைச்சர்.

யாருமே முதல் படியில் கால் வைக்காமல் அடுத்த படியிலோ, ஐந்தாவது படியிலோ ஏறுவதில்லை…. என்பது மட்டுமல்ல அரசியலை பிறந்திதிலிருந்தே சுவாசித்தும், பின்பு வாசித்தும் வளர்ந்தவள் நான்… அரசியலை அனுபவிதது வளர்ந்ததே அனுபவம். அதை சொல்லி கொள்ளும் ஆணவமும் என்னிடம் இல்லை. நான் ஆணவமாகப் பேசுவதில்லை ஆவணங்களை ஆராய்ந்தே பேசுகிறேன். மருத்துவம் படித்த நான் பிறர் வருத்தம் அடையும் வார்த்தைகளை என்றுமே பயன்படுத்தியதில்லை. ஆனால் மக்கள் வருத்தம் அடையும் போது கருத்துக்களை ஆணித்தரமாக சொல்கிறேனே தவிர ஆணவத்துடன் சொல்வது இல்லை.

பல தலைவர்களைப் பார்த்தே நான் பாடம் கற்றிருக்கிறேன். நான் பல தருணங்களில் கலைஞரின் தமிழும், ஜெயலலிதாவின் துணிச்சல் கொண்ட குணத்தோடு செயலாற்ற வேண்டும் என்று சொல்லியிருக்கிறேன். காமராஜரையும் பார்த்திருக்கிறேன். எம்.ஜி.ஆர் அவர்களையும் பார்த்திருக்கிறேன். வாழ்க்கைப் பாடத்தை அவர்களிடம் இருந்து படித்தும் இருக்கிறேன். ஆனால் தடித்த வார்த்தைகளை அமைச்சர் தங்கமணியைப் போல் பயன்படுத்துவதில்லை.

மக்களுக்காக, மக்கள் துன்பப்படும் போது மனதில் பட்டத்தை பட்டென்று ஒளிவு மறைவில்லாமல் பேசி, நானே எழுதி கையெழுத்திடுகிறேன். பிறர் எழுதுவதைப் பேசுவதும் இல்லை, யாரோ எழுத நான் கையெழுத்திடுவதுமில்லை. தமிழக மக்களின் தலை எழுத்து நன்றாக இருக்க வேண்டும் என்று, நெஞ்சில் அடி ஆழத்தில் இருந்து வார்த்தைகள் வருகிறதே தவிர அரைவேக்காட்டுத்தனமாக அல்ல…. என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு

இப்படிக்கு
என்றும் மக்கள் பணியில்

(டாக்டர் .தமிழிசை சௌந்தரராஜன்)

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.