இந்தியாவின் பக்கத்து நாடுகளில் ஒன்றான வங்கதேசம் 1971ம் ஆண்டு சுதந்திரம்பெற்றது. அப்போது இந்திய எல்லைக்குள் 51 வங்கதேசகிராமங்கள் இருந்தன. அதுபோல வங்கதேசத்துக்குள் இந்தியாவுக்கு சொந்தமான 111 கிராமங்கள் இருந்தன.

இந்தியாவில் இருந்த வங்கதேச கிராமங்கள் நாலாபுறமும் இந்தியாவால் சூழப்பட்டிருந்தது. அதுபோல வங்கதேசத்தில் இருந்த 111 இந்திய கிராமங்களும் வங்கதேச எல்லைகளால் சூழப்பட்டிருந்தது. இதனால் இந்த 162 கிராமங்களும் சுற்றிலும் வேறுநாடு சூழ்ந்திருக்க தனித் தனி தீவுகள் போல இருந்தன.

இந்த 162 கிராமங்களிலும் சுமார் 52 ஆயிரம்பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவருக்கும் இந்திய குடியுரிமையோ அல்லது வங்கதேசத்தின் குடியுரிமையோ கிடைக்கவில்லை. மேலும் இவர்களுக்கு எந்த நாட்டின் சலுகைகள், வசதிகள் உள்ளிட்ட எந்தபயனும் பெற முடியாமல் இருந்தனர்.

கடந்த 1971–ம் ஆண்டு முதல் 44 ஆண்டுகளாக 162 கிராமத்தினரும் எந்தபக்கமும் சேர முடியாமல் தவித்தப்படி இருந்தனர். இவர்களை அந்தந்த நாட்டுடன் சேர்க்க முயன்ற முதல் முயற்சிகள் தோல்வியில் முடிந்தன.

இந்த நிலையில் கடந்த ஜூன் மாதம் வங்கதேசத்துக்கு சென்ற பிரதமர் நரேந்திர மோடி இது தொடர்பான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

இதையடுத்து அந்தந்த நாட்டு எல்லைகுள் இருக்கும் கிராமங்களை அந்தந்த நாட்டிடமே ஒப்படைக்கும் பணியை இந்தியாவும், வங்கதேசமும் தொடங்கின. இருநாட்டு அதிகாரிகளும் ஆய்வு நடத்தி இதற்கான பணிகளை பூர்த்திசெய்தனர். இதன் தொடர்ச்சியாக நேற்று இரவு 12 மணி முதல் இந்தியாவில் உள்ள வங்கதேசத்தின் கிராமங்கள் இந்திய கிராமங்களாக மாறியுள்ளன.

அதுபோல வங்க தேசத்துக்குள் உள்ள 111 இந்திய கிராமங்கள் நேற்றிரவு முதல் வங்கதேசத்துக்கு உட்பட்ட பகுதிகளாக மாறியுள்ளன. இந்த மாற்றம் காரணமாக வங்கதேசம் சுமார் 7110 ஏக்கர் பரப்பளவை இந்தியாவுக்கு கொடுத்துள்ளது. அதற்கு பதில் இந்தியா 17,160 ஏக்கர் நிலத்தை வங்கதேசத்துக்கு விட்டுக் கொடுத்துள்ளது.

இந்தியாவுக்குள் இருந்த வங்கதேசத்தின் 51 கிராமங்களில் 14 ஆயிரத்து 856 பேர் வசித்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் நேற்றிரவு 12 மணி முதல் இந்தியர்களாக அதிகாரப்பூர்வமாக மாறி உள்ளனர். இன்று காலை இவர்கள் இந்தியர்கள் என்ற அந்தஸ்தை பெற்றனர். இவர்கள் 68 ஆண்டுகளுக்கு பிறகு சுதந்திரம் பெற்றிருப்பதாக குதூகலம் அடைந்துள்ளனர்.

நேற்றிரவு 12 மணிக்கு அவர்கள் இந்திய தேசியக்கொடியை ஏற்றினார்கள். மெழுகுவர்த்தி ஏந்தியும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள்.

இந்தியர்களாக மாறியுள்ள சுமார் 15 ஆயிரம் பேரும், தஙக்ளது 68 ஆண்டு கால கனவும், ஏக்கமும் தீர்ந்துவிட்டதாக கூறினார்கள். இளைஞர்கள் தங்களுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்துவிட்டதாக தெருக்களில் விடிய, விடிய நடனமாடினார்கள்.

வங்கதேசத்திடம் இந்தியா ஒப்படைத்துள்ள 111 கிராமங்களில் 37 ஆயிரத்து 369 பேர் வசித்துவருகிறார்கள். இவர்கள் அனைவரும் முதல் வங்கதேச நாட்டவர்களாக மாறிஉள்ளனர். இந்த மாற்றத்தை 162 கிராம மக்களும் மனப்பூர்வமாக ஏற்றுள்ளனர்.

இதற்கிடையே வங்கதேசத்துக்குள் இருந்த 111 பகுதிகளில் வசிக்கும் 36 ஆயிரம் பேரில் 979 பேர் தாங்கள் வங்க தேசத்தவர்களாக மாறவிருப்பம் இல்லை என்று கூறிவிட்டனர். இந்தியாவுக்குள் வந்து இந்தியர்களாக வாழ விரும்புவதாக தெரிவித்தனர்.

அதன் பேரில் அவர்கள் 979 பேருக்கும் இடமாற்றத்துக்கான வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. முதலில் அவர்கள் இந்திய பகுதியில் தங்கியிருக்க முகாம்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. பிறகு அவர்கள் வேறு இடங்களில் குடியமர்த்தப்படுவார்கள்.

இந்தியாவும், வங்கதேசமும் இன்றுமுதல் 162 பகுதிகளை மாற்றிக் கொள்வதன் இந்தியர்களாக மாறியுள்ள 15 ஆயிரம் பேர் இனி மத்திய, மாநில அரசுகள் வழங்கும் கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் உள்ளிட்ட எல்லா சலுகைகளையும் பெறுவார்கள். அதுபோல வங்க தேசத்தவர்களாக மாறியுள்ள 37 ஆயிரம் பேருக்கு அந்நாட்டின் சலுகைகள் கிடைக்கும். இதன்மூலம் கடந்த 68 ஆண்டு களாக இருந்துவந்த உலகின் மிகவும் சிக்கலான எல்லை பிரச்சினைக்கு தீர்வு காணப் பட்டுள்ளது.

அடுத்த ஆண்டு (2016) ஜூன் மாதம் 30–ந் தேதிக்குள் இந்த மாற்றங்களை முழுமையாக செய்துமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்கு வசதியாக இந்தியபகுதியாக மாறியுள்ள 51 ஊர்கள் மேம்பாட்டுக்கும், அங்கு வசிக்கும் 15 ஆயிரம் புதிய இந்தியர்களை மேம்படுத்த பிரதமர் நரேந்திரமோடி ரூ.3048 கோடி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.