இந்திய சுதந்திரப் போராட்டத்தின்போது வெளிநாட்டுப் பொருட்களை புறக்கணித்து உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் கதர் போன்ற பொருட்களை நாட்டு மக்கள் பயன்படுத்த வேண்டும் என்று பிரகடனம் செய்யப்பட்டது.

இந்த பிரகடனம் 1905–ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் 7–ந் தேதி கொல்கத்தாவில் நடந்த மாநாட்டில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது.

நாட்டு மக்களிடம் தேசியப் பற்றை ஏற்படுத்த வழிவகுத்த இந்த பிரகடன தினத்தை நினைவு கூரும் வகையில் ஆண்டுதோறும் ஆகஸ்டு 7–ந்தேதி தேசிய கைத்தறி தினம் கொண்டாட மத்திய அரசு முடிவு செய்தது. கடந்த ஆண்டு பிரதமர் பொறுப்பை ஏற்றதும், இதற்கான அறிவிப்பை மோடி வெளியிட்டார்.

பொதுவாக மத்திய அரசு நடத்தும் இத்தகைய தேசிய அளவிலான விழாக்கள் தலைநகர் டெல்லியில் தான் நடைபெறும். நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பிறகு இத்தகைய தேசிய விழாக்களை மற்ற மாநில தலைநகரங்களில் நடத்த உத்தரவிட்டார். அதன்படி சென்னையில் நேற்று (வெள்ளிக்கிழமை) தேசிய கைத்தறி தின தொடக்க விழா நடத்தப்பட்டது.

விழாவில் கலந்து கொள்ள பிரதமர் நரேந்திர மோடி நேற்று காலை 7.45 மணிக்கு டெல்லியில் இருந்து சிறப்பு விமானத்தில் சென்னைக்கு புறப்பட்டார். காலை 10.30 மணிக்கு பிரதமர் மோடியின் விமானம் சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரை இறங்கியது.

பிரதமர் நரேந்திர மோடிக்கு விமான நிலையத்தில் தமிழக அரசு சார்பில் உற்சாக வரவேற்பு கொடுக்கப்பட்டது. கவர்னர் ரோசய்யா, முதல்–அமைச்சர் ஜெயலலிதா ஆகியோர் பூச்செண்டு கொடுத்து மோடியை வரவேற்றனர்.

தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன் மற்றும் எச்.ராஜா, வானதி சீனிவாசன், மோகன் ராஜ் மத்திய மந்திரி பொன்.ராதா கிருஷ்ணன், அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், நத்தம் விசுவநாதன், வைத்திலிங்கம், எடப்பாடி பழனிச்சாமி, பழனியப்பன், மேயர் சைதை துரைசாமி.

தலைமை செயலாளர் ஞானதேசிகன், போலீஸ் டி.ஜி.பி. அசோக்குமார், ராணுவ உயர் அதிகாரி ஜக்பீர்சிங் ஆகியோரும் மோடியை வரவேற்றனர்.

விமான நிலைய வரவேற்பு முடிந்ததும் பிரதமர் மோடி குண்டு துளைக்காத காரில் கைத்தறி தின விழா நடந்த சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு அரங்குக்கு 11.20 மணிக்கு சென்றார். அங்கு அவருக்கு பூரண கும்ப மரியாதையுடன் வரவேற்பு கொடுக்கப்பட்டது.

பல்கலைக்கழக நூற்றாண்டு மண்டபத்தின் ஒரு பகுதியில் மத்திய ஜவுளித்துறை சார்பில் கைத்தறி தயாரிப்புகள் கண்காட்சி அமைக்கப்பட்டிருந்தது. எல்லா மாநில நெசவாளர்களின் படைப்புகள் அதில் இடம் பெற்றிருந்தன.

பிரதமர் நரேந்திர மோடி அந்த கைத்தறி கண்காட்சி கூடத்தை சுற்றிப் பார்த்தார். ஒவ்வொரு கைத்தறி ரகத்தையும் அவர் நிதானமாக பார்த்து ரசித்தார். சில நெசவாளர்களுக்கு அவர் கை கொடுத்து பாராட்டினார்.

11.40 மணிக்கு கைத்தறி தின விழா தொடங்கியது. இதில் பிரதமர் மோடி, கவர்னர் ரோசய்யா, மத்திய ஜவுளித்துறை மந்திரி சந்தோஷ்குமார் கங்க்வார், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் ஓ.பன்னீர்செல்வம், கோகுலஇந்திரா கலந்து கொண்டனர்.

விழாவில் ஆகஸ்டு 7–ந் தேதியை தேசிய கைத்தறி தினமாக பிரதமர் மோடி அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். எனவே இனி ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்டு 7–ந்தேதி தேசிய கைத்தறி தினமாக கொண்டாடப்படும். அதை பிரதிபலிக்கும் வகையில் சிறுபடக்காட்சி காட்டப்பட்டது.

கைத்தறியின் பாரம்பரியத்தைப் போற்றும் வகையில் ''தேசிய கைத்தறி முத்திரை'' உருவாக்கப்பட்டுள்ளது. அதை பிரதமர் மோடி இன்று விழா மேடையில் அறிமுகம் செய்தார். இதையடுத்து கைத்தறி நெசவாளர்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

2012–ம் ஆண்டு முதல் 2014–ம் ஆண்டு வரை சிறந்த ரகங்களை அறிமுகப்படுத்தி தனி முத்திரைப் பதித்த 72 நெசவாளர்கள் ''சந்த் கபீர்'' மற்றும் தேசிய விருதுகள் பெற தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்கள் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி தம் கைப்பட விருதுகளை வழங்கி பாராட்டினார்.

72 பேரில் 16 பேர் சந்த் கபீர் விருது பெற்றனர். 56 பேர் தேசிய விருது பெற்றனர்.

விருது பெற்ற 72 நெசவாளர்களில் 3 பேர் காஞ்சிபுரத்தைச் சேர்ந்தவர்கள். பட்டுப்புடவையில் சிறந்த ரகத்தை அறிமுகம் செய்த சுந்தர்ராஜனுக்கு ''சந்த் கபீர்'' விருது வழங்கப்பட்டது. அவ ருக்கு ரூ.6 லட்சம், தங்க நாணயம், தாமிர பத்திரம், சால்வை, சான்றிதழ் வழங் கப்பட்டது. பழனிவேல் மற்றும் ஜெயந்தி இருவரும் தேசிய விருது பெற்றனர். இவர்களுக்கு ரூ. 1 லட்சம் பரிசு, அங்கவஸ்திரம், சான்றிதழ் கொடுக்கப்பட்டது.

இவர்கள் தவிர நாடெங்கிலும் இருந்து பல நெசவாளர்கள் தேசியத் திறன் மேம்பாட்டுக்கான விருது பெற தேர்வு செய்யப்பட்டிருந்தனர். அவர்களில் 4 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அவர்கள் விபரம் வருமாறு:–

1. பழனிச்சாமி, சுல்தான் பேட்டை, கோவை.

2. குணசேகரன், கடம்பச்சேரி, கோவை.

3. செல்வராஜ், கடம்பச்சேரி, கோவை.

4. பெருமாள், ஆரணி.

இவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.

விழாவில் ''இந்திய கைத்தறி'' என்ற புதிய ரகம் அறிமுகப்படுத்தப்பட்டது. இது தவிர இந்தியாவில் உள்ள மூன்று சிறந்த கைத்தறி நிறுவனங்கள் தேர்வு செய்யப்பட்டு அவற்றுக்கும் விருதும், பாராட்டு சான்றிதழும் வழங்கப்பட்டது.

தமிழக அரசின் கோஆப் டெக்ஸ் நிறுவனம் தயாரிக்கும் சேலம் வெண்பட்டும் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளது. மென்மையாகவும், பளீரென மின்னும் சேலம் வெண்பட்டை தயாரித்து வழங்குவதற்காக கோஆப் டெக்சுக்கு பிரதமர் மோடி விருது வழங்கினார்.

சேலம் வெண்பட்டு தவிர மேற்கு வங்கத்தின் டங்கைல் சேலை, பனாரசின் தன்சோய் சேலையும் விருதுக்கு தேர்ந்து எடுக்கப்பட்டிருந்தது. அவற்றுக்கும் பிரதமர் மோடி வழங்கினார்.

விழாவில் நிதி அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் உரையாற்றினார். பிறகு அவர் முதல்–அமைச்சர் ஜெயலலிதாவின் உரையை வாசித்தார்.

இதையடுத்து 12.25 மணிக்கு பிரதமர் நரேந்திர மோடி தமிழில் வணக்கம் என்று கூறியபடி தனது பேச்சைத் தொடங்கினார். 1.10 மணிக்கு அவர் பேச்சை முடித்தார். அவர் 45 நிமிடங்கள் பேசினார்.

விழாவில் பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கைத்தறி நெசவாளர்கள் ஆயிரக்கணக்கில் கலந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.