முதலில், அமெரிக்க அரசுடன், பிரதமராக இருந்த ராஜிவ் மேற்கொண்டிருந்த லாபகரமான ஒப்பந்தம் குறித்து, சோனியாவிடம், கேட்டு தெரிந்து கொள்ளட்டும். அதன்பின், போபால் விஷ வாயு கசிவுக்கான முக்கிய குற்றவாளி, வாரன் ஆண்டர்சனை, அமெரிக்காவுக்கு, காங்கிரஸ் , அரசு தப்பவிட்டது ஏன் என்பதையும், ராகுல் கேட்டு தெரிந்து கொள்ள வேண்டும்.அரசியலில் நான், 38 ஆண்டுகளாக இருக்கிறேன். ஒரு துறவி போல, அரசியலில் ஒழுக்கம் கடைபிடிக்கிறேன். காங்கிரஸ் ஆட்சியின்

போதுதான், லலித் மோடிக்கு, பிரிட்டனின் குடியுரிமை கிடைத்தது. இப்போது அதே காங்கிரசார்தான், என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். லலித் மோடி விவகாரத்தில், காங்., தலைவர்கள் இரு பிரிவாக பிரிந்துள்ளனர். ஒரு பிரிவினர் விசாரணை நடத்த வேண்டும் எனவும், மற்றொரு பிரிவினர் வேண்டாம் எனவும் கருதுகின்றனர். இந்த விவகாரத்தில், காங்கிரசை தோலுரித்து காட்ட விரும்புகிறேன்.

போபால் விஷவாயு கசிவுக்கு காரணமான, யூனியன் கார்பைட் நிறுவனத்தின் தலைவர் வாரன் ஆண்டர்சனை தப்பவிட்டதன் மூலம், அப்போதைய பிரதமராக இருந்த ராஜிவ், தன் பால்ய கால சினேகிதன், அமெரிக்காவில், 35 ஆண்டுகளாக சிறையில் இருந்த, அதுல் ஷார்யாரை காப்பாற்றினார்.இதையெல்லாம் தெரியாமல், ராகுல், என்னிடம் கேள்வி எழுப்புகிறார். அவர் முதலில் விடுமுறை எடுத்துக் கொண்டு, தன் குடும்ப வரலாற்றை படிக்கட்டும். அதன்பின், இங்கு வந்து கேள்வி எழுப்பட்டும். விடுமுறை எடுப்பதுதான், ராகுலுக்கு பிடித்தமான விஷயமாயிற்றே! விடுமுறையின் போது, அம்மா சோனியாவிடம், 'போபர்ஸ் ஊழலில் தொடர்புடைய, ஆயுத தரகர் குட்ரோச்சியிடம் இருந்து, நம் குடும்பம் எவ்வளவு பணம் வாங்கியது' எனவும் கேட்கவேண்டும்.

திருடர்கள்தான் ரகசியமாக செயல்படுவர் என, ராகுல் தெரிவித்து உள்ளார். நான் எதையும் ரகசியமாக செய்யவில்லை. ராகுலின் தந்தையும், காங்கிரசும் தான், குட்ரோச்சி தப்ப ரகசியமாக உதவினர்.'லலித் மோடிக்கு வழக்கறிஞர்களாக, என் குடும்பத்தினர் தான் உள்ளனர்' என, லோக்சபா காங்., தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கூறுகிறார். என் கணவர், லலித் மோடியின் பாஸ்போர்ட் வழக்கில் ஆஜராகவே இல்லை. மேலும், வழக்கறிஞராக இருக்கும் என் மகள், லலித் மோடியிடம் இருந்து ஒரு பைசா கூட வாங்கியதில்லை.

ஆனால், மத்திய அமைச்சராக சிதம்பரம் இருக்கும்போது, அவர் துறை சார்ந்த வழக்கின் வழக்கறிஞராக, சிதம்பரத்தின் மனைவி நளினி நியமிக்கப்பட்டார். அது விவகாரமாக ஆன பின்தான், சிதம்பரம் அந்த தகவலை ஒப்புக்கொண்டார். மேலும், சிதம்பரத்தின் மனைவி நளினிக்கு, மேற்குவங்கத்தின் சாரதா சிட்பண்ட் முறைகேடு வழக்கிலும் தொடர்புள்ளது.லலித்மோடி விவகாரத்தில் நான் எந்த முறைகேடும் செய்யவில்லை. பெண் என்ற ரீதியில், லலித் மோடியின் மனைவிக்கு சில உதவிகள் செய்தேன். அதையும் வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளேன். எதிர்க் கட்சியினர் கூறுவது போல, லலித் மோடிக்கு பயண ஆவணங்கள் பெற உதவி செய்ய வில்லை. இவ்வாறு சுஷ்மா பேசினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.