பிரதமர் நரேந்திரமோடி 2 நாள் சுற்றுப்பயணமாக ஞாயிற்றுக் கிழமை ஐக்கிய அரபு அமீரகம் சென்றடைந்தார். முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி கடந்த 1981-ம் ஆண்டு யுஏஇ சென்றார். இந்நிலையில், கடந்த 34 ஆண்டுகளில் முதல்முறையாக இந்திய பிரதமர் யுஏஇ மேற்கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டத்து இளவரசர் ஷேக் முகமதுபின் ஜாயேத் அல் நயான், மரபுகளுக்கு மாறாக பிரதமரை விமான நிலையத்திற்கே வந்து வரவேற்றார். அவருடன் அவரது 5 சகோதரர்களும் வந்திருந்தனர். விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு சம்பிரதாய வரவேற்பு தரப்பட்டது . இதையடுத்து எமிரேட்பேலஸ் ஹோட்டலுக்கு சென்றார் பிரதமர்.

அபுதாபி வந்துசேர்ந்ததும் பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் அரபி மொழியில் விடுத்த செய்தியில், "எனது பயணத்தால் இந்தியா – ஐக்கிய அரபு அமீரகம் இடையேயான உறவுகள் வலுவடையும் என உறுதியாக நம்புகிறேன்" என குறிப்பிட்டார்.

பிரதமர் மோடி தனது பயணத்தில் முதல் நிகழ்ச்சியாக ஷேக்சயீத் பெரிய மசூதிக்கு சென்றார். இஸ்லாமிய கட்டிட கலைக்கு சிறந்த எடுத்து காட்டாக திகழும் இந்தமசூதி, சவுதி அரேபியாவில் உள்ள மெக்கா, மதீனா மசூதிகளுக்குப் பிறகு உலகின் 3வது மிகப்பெரிய மசூதியாக திகழ்கிறது. அமீரக அதிகாரிகள் மோடிக்கு மசூதியை சுற்றிக்காண்பித்து அதன் நுண்கலை குறித்து விவரித்தனர்.

அமீரகத்தை சேர்ந்த ஷேக்களுடன் பிரதமர் மசூதியில் செல்ஃபீ எடுத்து கொண்டார். தனது வெளிநாடு பயணங்களில் அங்குள்ள மக்களுடன் செல்ஃபீ எடுப்பதை பிரதமர் வழக்கமாக கொண்டுள்ளார். இம்முறை, இளவரசர் ஷேக் நயான் மற்றும் அந்நாட்டு வெளியுறவுத்துறை இணை அமைச்சர் அன்வர் கர்காஷ் ஆகியோருடன் ஷேக் ஜயீத் மசூதியில் #Selfie எடுத்துக் கொண்டதாக தனது ட்விட்டர் பக்கத்தில் படத்தை பகிர்ந்திருந்தார்.

பிரதமர் மோடிக்கு இளவரசர் ஷேக்முகமது நயான் இரவு விருந்தளித்தார். மோடிக்காக பிரத்யேகமான சைவ உணவை சிறப்புசமையல் கலை நிபுணர் சஞ்ஜீவ்கபூர் தயாரித்தார். பிரதமருக்காக சமைக்க தனது குழுவுடன் அமீரகம் சென்றுள்ளதை சஞ்ஜீவ்கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.

பிரதமர் மோடி துபாயில் உள்ள கிரிக்கெட் மைதானத்தில் இந்தியர்கள் மத்தியில் ஆற்றும் உரையை கேட்பதற்கு மிகுந்த ஆர்வம் நிலவியது. சுமார் 40,000பேர் மட்டுமே பார்வையாளர்களாக அமரத்தகுந்த அந்த மைதானத்தில், மோடியின் உரையை கேட்க 50,000 இந்தியர்கள் முன்பதிவுசெய்தனர். மேலும், மைதானத்தில் வெளியிலும் 16,000 பேர் உரையை கேட்க ஏற்பாடு செய்யப்பட்டது.

அபுதாபியில் முதல் இந்துகோயிலை கட்ட அமீரக அரசு நிலம் ஒதுக்குவதாக உறுதி செய்துள்ளது. வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அமீரகத்தின் இந்த அறிவிப்புக்கு பிரதமர் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அபுதாபியில் கோயில்கட்ட நிலம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ளதுக்கு நன்றி. இது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தசெயல்" என குறிப்பிட்டார்.

சுமார் 20 லட்சம் இந்தியர்கள் யு.ஏ.இ.-யின் பல்வேறு பகுதிகளில் பணியாற்று கின்றனர். இதில் 60 சதவீதத்தினர் உயர்மட்ட வேலைகளில் உள்ளனர். தொழில்நகரமான அபுதாபியில் இந்திய தொழிலாளர்கள் அதிகம் வசிக்கின்றனர். அங்குள்ள கூடைப் பந்து உள்விளையாட்டு அரங்கத்து சென்ற பிரதமர் நரேந்திர மோடி, தொழிலாலர்களிடம் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார். இந்த சந்திப்பின்போது ஊடகங்கள் அனுமதிக்கப்படவில்லை.

Tags:

Leave a Reply