வட கிழக்கு மாநிலங்களில் உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கு மத்திய அரசு கூடுதல் முன்னுரிமை தரும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

பிரிட்டிஷ் ஏகாதி பத்தியத்தை எதிர்த்து போராடியவரும் ஆன்மிக தலைவருமான ராணிகைடின்லியு பிறந்த நூற்றாண்டு விழா டெல்லியில் நடைபெற்றது. இந்த விழாவில், கைடின்லியுவின் நினைவாக ரூ.100 நினைவு நாணயங்களும், ரூ. 5 மதிப்புள்ள புழக்கத்துகான நாணயங்களும் வெளியிடப்பட்டன.

நிகழ்ச்சியில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

வட கிழக்கு பிராந்தியத்தில் அமைதியையும் ஸ்திரத் தன்மையையும் கொண்டு வருவதற்கான முயற்சிகளில் கிடைத்திருக்கும் வெற்றி எந்த தனிப்பட்ட அரசுக்கும் உரிமையல்ல. அனைத்து அரசுகளுமே நிலைமையை மேம் படுத்துவதில் பங்காற்றியுள்ளன. இம்முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியின் காரணமாகவே இன்று நாகாலாந்தில் என்.எஸ்.சி.என் (ஐ-எம்) அமைப்புடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை நடந்துவருகிறது.

நாகாலாந்து மட்டுமல்ல, ஒட்டுமொத்த வடகிழக்கு மாநிலங்களும் வளர்ச்சி குறித்தும், தேசிய நீரோட் டத்தில் இணைவது குறித்தும் ஒவ்வொருவரும் கனவுகண்டனர். மத்திய அரசுக்கும், என்எஸ்சிஎன் (ஐ-எம்) அமைப்புக்கும் உடன்படிக்கை ஏற்பட்டுள்ளது. இந்தபயணம் நாம் இணைந்து நடப்பதில் தொடங்கியிருக்கிறது. இதன் விளைவாக நமதுதேசம் மிகுந்த சாதனைகளை படைக்கும் என நம்புகிறேன்.

இணைப்பு, தொடர்பில் உள்ள பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு விட் டால் வளர்ச்சியை எட்டுவது ஒருபொருட்டே அல்ல. இப்பகுதியிலுள்ள மாநிலங்களின் தலை நகர்கள் ரயில் பாதைகள் மூலம் இணைக்கப்பட்டுள்ளன. இப்பகுதியில் அன்னாசி விளைகிறது, நாகாலாந்தில் மிள காய் விளைகிறது. தேசத்தின் இயற்கை விளை பொருட்களின் (ஆர்கானிக்) தலை நகரமாக வடகிழக்கு மாநிலங்கள் விளங்கும்.

இப்பிராந்தியத்தின் மேம்பாடு, தேசத்தின் வளர்ச்சியில் முக்கியப்பங்கு வகிக்கிறது. வங்கதேசத்துடனான நில எல்லை ஒப்பந்தம், இப்பிராந்தியத்தை நாட்டின் இதரபகுதிகளுடன் இணைப்பதற்கு மேலும் உதவியாக இருக்கும். இந்திய சுதந்திரத்துக்காக போராடிய வீரம்மிக்க போராளிகளில் பலர் இந்திய வரலாற்றில் விடுபட்டுள்ளனர்.

இந்திய விடுதலைக்காக பிரிட்டிஷாரை எதிர்த்து போராடிய ராணி கைடின்லியு, விடுதலைக்கு பிறகும் சிறையில் மூன்று நான்குமாதங்கள் வைக்கப்பட்டிருந்தார். அவர் இயற்கையை வணங்குபவர் என்பதால், அரசியல் காரணங்களுக்காக அவர் தனது சொந்த கிராமத்துக்கு செல்லவில்லை.மகாத்மா காந்தியின் கொள்கைகளை வட கிழக்கு பிராந்தியத்தில் பரப்புவதற்கு அவர் பெரும்பங்காற்றினார்.

1938-ம் ஆண்டு ஹரி புராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில், ராணி கைடின்லியுவை விடுவிக்க கோரும் தீர்மானம் முக்கியத்துவம் வாய்ந்தது.

ஜவாஹர்லால் நேருதான் வட கிழக்கு மக்களின் அரசி என பொருள்படும் 'ராணி' என்ற அடைமொழியை அவருக்கு தந்தார் என நிகழ்ச்சியில் தெரிவிக்கப்பட்டது. கைடின்லியு, கல்யாண் ஆசிரமம், விஷ்வ இந்து பரிஷத், வித்யபாரதி போன்ற அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டார் என கலாச்சார துறை வெளியிட்டுள்ள தகவல் கையேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.