மலர்களைப்போல் தங்கை உறங்குகின்றாள், அண்ணன் வாழவைப்பான் என்றே அமைதிகொண்டாள்'' என்ற திரைப்பாடல், தமிழ்நாட்டிலும், இதுபோன்ற பலமொழிகளில் இருக்கும் பாடல்கள், அந்தந்த மொழிகளைப்பேசும் மக்களுக்கும், சகோதர, சகோதரி உறவுகள், அதாவது அண்ணன், தம்பி, அக்கா, தங்கை உறவுகளின் மேன்மையை உணர்ச்சிபூர்வமாக நெஞ்சைத் தொடவைக்கின்றன.

ஒரு பெண்ணுக்கு திருமணம் ஆகும் முன்பும் சரி, அவளுக்கு திருமணம், அவள் குழந்தைகளுக்கு திருமணம் என்று அனைத்து சமூக சடங்குகளிலும் அண்ணன்–தம்பியின் பங்கு முக்கியமாக இருக்கும். இதுதான் இந்தியாவின் சிறப்பு. ஆண்டுதோறும் 'ரக்ஷா பந்தன்' நாளில் கூடப்பிறந்தவர்கள் மட்டுமல்லாமல், ஒரு பெண்ணை சகோதரியாக நினைக்கும் ஆணுக்கும், அதுபோல தன் உடன்பிறந்த சகோதரர்களாக இல்லையென்றாலும், கூடப்பிறக்காத சகோதரராகவே ஒரு ஆணை நினைக்கும் பெண்ணுக்கும் இந்தநாள் தங்கள் பாசப்பிணைப்பை பறைசாற்றும் நன்னாள்.

இந்தநாள் இந்தியாவில் வடநாடுகளில் ஆதிகாலம் முதலே இருந்திருக்கிறது என்பதற்கு சரித்திர சான்றுகள் இருக்கின்றன. இந்த நாளில் சகோதரிகள் தங்கள் சகோதர பாசத்தை உறுதிப்படுத்தும் வகையில், சகோதரர்கள், சகோதரர்களாக கருதுபவர்களின் மணிக்கட்டில் 'ராக்கி கயிறு' கட்டுவதும், அந்த சகோதரர்கள் தங்கள் சகோதரிகளுக்கு பரிசுகள் அளித்து மகிழ்வதும் மரபு. ரஜபுத்திர, மராட்டிய ராணிகள் கூட முகலாய மன்னர்களுக்கு 'ராக்கி கயிறு' அனுப்பியதாக கூறப்படுகின்றன.

இதுபோல, சித்தூரில் ஆட்சிபுரிந்த ராணியான கணவரை இழந்த பெண் கர்னாவதி, தன் நாட்டை குஜராத் சுல்தான் பகதூர் ஷா படையெடுத்து தாக்கிய நேரத்தில், முகலாய சக்கரவர்த்தி ஹுமாயூனுக்கு ராக்கி கயிறு அனுப்பியதால், மனம் நெகிழ்ந்த ஹுமாயூன் அவருக்கு உதவ தன் படையோடு ஓடோடி வந்தார் என்றும் சரித்திரம் கூறுகிறது.

இந்த ஆண்டு இந்த ரக்ஷா பந்தன் தினம் நாளில் அனைவரும் தங்கள் சகோதரிகளுக்கு கொடுக்கும் சிறந்த ராக்கி பரிசு, இப்போது அறிவிக்கப்பட்டுள்ள ஆயுள் காப்பீடு மற்றும் விபத்து காப்பீட்டு திட்டங்களில் அவர்களை சேர்ப்பதுதான் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருக்கிறார். ராக்கி சகோதரிகள் பட்டியலில் வீடுகளில், வயல்களில் வேலைபார்க்கும் பெண்களையும் சேர்த்துக்கொள்ள கூறியிருக்கிறார். நாட்டில் உள்ள அனைத்து சகோதரிகளும் இந்த திட்டத்தின் பயனை பெறும்வகையில் இதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றவேண்டும் என்றும் கேட்டு இருக்கிறார்.

ஒரு சகோதரி அதாவது, மம்தா பானர்ஜி முதல்–மந்திரியாக இருக்கும் மேற்குவங்காளத்தில்தான், பிரதமர் மோடி சில மாதங்களுக்கு முன்பு ஆண்டுக்கு 12 ரூபாய் மட்டும் பிரிமியம் கட்டி ரூ.2 லட்சம் பெறும் விபத்து காப்பீடு, ஆண்டு பிரிமியம் ரூ.330 ரூபாயில் ஆயுள் காப்பீடு ஆகிய திட்டங்களை அறிமுகப்படுத்தினார்.

இந்த ரக்ஷா பந்தன் அன்று சகோதரிகளுக்கு ராக்கி பரிசாக இந்த திட்டங்களில் அவர்களைச் சேர்த்துவிடுங்கள் என்பது வரவேற்கத்தக்க ஒன்றாகும். வேறு இனிப்புகளோ, மலர்களோ கொடுத்தால் அந்த ஒரு நாள்தான் பலனளிக்கும். அதற்கு பதிலாக, இந்த திட்டங்களில் சேர்த்துவிடுவது ஒரு சமூக பாதுகாப்பை அளிக்கும். வடஇந்தியாவில் மட்டுமல்லாமல், சகோதர பாசத்தை மென்மேலும் வளர்க்கும் இந்த ராக்கி கயிறு கட்டும் நாள், இப்போது தென்இந்தியாவிலும் உள்ளே நுழைந்துவிட்டது. சகோதரிகள் தங்கள் சகோதரர்களுக்கு ராக்கி கயிறு கட்டினாலும், கட்டாவிட்டாலும் சகோதரர்கள் அளிக்கும் அன்பு பரிசாக பிரதமர் கூறியபடி, இந்த திட்டங்களையே சகோதரிகளுக்கு அளிக்கலாமே!

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.