இந்தி மொழியின் புகழை உலகம் முழுவதும் பரப்பும் நோக்கில் கடந்த 1975-ம் ஆண்டு முதல் உலக இந்தி மாநாடு நடத்தப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் 9-வது மாநாடு கடந்த 2012-ம் ஆண்டு தென்ஆப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க் நகரில் நடந்தது. அந்த மாநாட்டின் போது, அடுத்த மாநாட்டை இந்தியாவில் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது. அதன் அடிப்படையில் 10-வது உலக இந்தி மாநாடு மத்திய பிரதேச தலைநகர் போபாலில் 10-ந்தேதி (வியாழக்கிழமை) தொடங்கி 3 நாள் நடக்கிறது.

'இந்தி உலகம்: விரிவாக்கமும், நோக்கமும்' என்ற பொருளில் நடைபெறும் இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளின் கீழ் 24 அமர்வுகள் நடைபெறுகின்றன. இந்த மாநாட்டை வெளியுறவுத்துறை அமைச்சகமும், மத்திய பிரதேச அரசும் இணைந்து நடத்துகின்றன.

இந்த மாநாட்டை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்து உரையாற்றுகிறார். மாநாட்டின் இறுதி நாளில் மத்திய உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங், இந்தி நடிகர் அமிதாப்பச்சன் ஆகியோர் இந்தி மொழி தொடர்பான தலைப்புகளில் உரையாற்றுகின்றனர்.
மாநாட்டின் ஒரு பகுதியாக இந்தி மொழி தொடர்பான கண்காட்சியும் நடைபெறுகிறது. இதில் 'கூகுள்', 'ஆப்பிள்' உள்ளிட்ட தொழில்நுட்ப நிறுவனங்கள் பங்கேற்கின்றன.

இந்த மாநாட்டு ஏற்பாடுகள் குறித்து வெளியுறவுத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ் நேற்று செய்தியாளர்களிடம் விவரித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

போபாலில் நடைபெறும் 3 நாள் இந்தி மாநாட்டில் பங்கேற்க 450 சிறப்பு விருந்தினர்கள் மற்றும் 250 பிரபலங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மாநாட்டில் பங்கேற்க 27 நாடுகளை சேர்ந்த 1270 குழுவினர் பதிவு செய்துள்ளனர்.

அனைத்து மாநில முதல்-மந்திரிகள், பல்கலைக்கழகங்களின் இந்தி துறைத்தலைவர்கள் என பல்வேறு தரப்பினர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது. மேலும் மாநாட்டுக்கு மக்களை திரட்டுமாறு பாகிஸ்தான் உள்பட வெளிநாடுகளில் செயல்பட்டு வரும் அனைத்து இந்திய அமைப்புகளும் கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளன.

இந்த மாநாட்டில், 'வெளிநாடுகளில் இந்தி மொழியின் வளர்ச்சி', 'தென் மாநிலங்களில் இந்தி மொழி விரிவாக்கம்', 'நிர்வாகம் மற்றும் அறிவியலில் இந்தி மொழி', 'இந்தி மொழியில் அறிவியல் இலக்கியம்' உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் விவாதம் நடைபெறுகிறது. 'தூய இந்தியில் பேசுவோம்' என்ற தலைப்பில் அமிதாப்பச்சன் உரையாற்றுகிறார்.

இவ்வாறு சுஷ்மா சுவராஜ் கூறினார்.

Leave a Reply