'நாட்டின் நிதியமைச்சரான என் வேலை, வீட்டுப்பெண்களின் பணி போன்றதே. அதாவது, ஒவ்வொரு பைசாவையும் சிக்கனமாக செலவழித்து, மாத கடைசியில் பணக்கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்வது தான், என் முக்கிய வேலை,'' என, மத்திய நிதியமைச்சர் அருண்ஜெட்லி கூறினார்.

செய்தியாளர்களிடம் அமைச்சர் அருண் ஜெட்லி கூறியதாவது:முன்னாள் ராணுவத் தினருக்கு, ஒரேபதவி; ஒரே ஓய்வூதியம் வழங்க தயாராக இருக்கிறோம்; ஆனால், அவர்கள் கேட்பது போல, ஒவ்வொரு வருடமும் பென்ஷன் உயர்வை வழங்க முடியாது; ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை வேண்டுமானால் பரிசீலிக்கலாம்.ஏனெனில், ஏழாவது சம்பளகமிஷன் அறிக்கை, விரைவில் அரசிடம் சமர்ப்பிக்கப்பட உள்ளது. அந்த பரிந்துரைபடி, மத்தியஅரசு ஊழியர்களின் சம்பளம் மற்றும் பென்ஷனர்களின் ஓய்வூதியம் உயர்த்தப்படும் போது, அரசுக்கு கூடுதல் செலவாகும்; அதையும் சமாளிக்க வேண்டி யுள்ளது.

என் பணி, ஒவ்வொரு வீட்டிலும் உள்ள பெண்களின் பணிபோன்றதே. அதாவது, வீட்டுக்காரர் கொண்டுவந்து கொடுக்கும் மாத சம்பளத்தை, சிக்கனமாக செலவுசெய்து, மாதம் முழுக்க பணக்கஷ்டம் வராமல் பார்த்துக் கொள்ளும், பெண்களின் பணி போன்றது தான், என் பணியும். எனவே, முன்னாள் ராணுவத்தினரின் கோரிக்கையான, ஆண்டுக்கு ஒரு முறை ஓய்வூதிய உயர்வை வழங்க முடியாது.

குடியரசுத் தலைவர் பிறப்பித்திருந்த அவசர சட்டம் காலாவதியாகும் நிலையில் அதை புதுப்பிக்க அரசு முயலவில்லை. இதற்கு மாற்றாக நீக்கு-போக்கு தன்மையுடன் கூடிய மாற்று வழியை அரசு பின்பற்றும். மாநிலங்களவையில் நிலுவையில் உள்ள இந்த மசோதாவில் தேவைக்கேற்ப திருத்தங்கள் செய்ய அரசு தயாராக உள்ளது. இது நிச்சயம் பின்னடைவு அல்ல. இந்த மசோதாவால் அரசியல் ரீதியில் முடக்கம் ஏற்படுவதற்கு பதிலாக மாற்று யோசனை மூலம் இதைக் கையாள முடிவு செய்துள்ளோம். அந்த வகையில் இது முன்னேற்றமே இவ்வாறு, அவர் கூறினார்.

Leave a Reply