கடைகளில் பொருள்களை வாங்கவும், மெட்ரோ ரயில் உள்ளிட்ட அனைத்து போக்கு வரத்து சேவைகளுக்கும் பயன்படுத்தும் வகையிலும் புதிய ஸ்மார்ட் அட்டையை மத்திய அரசு விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இந்தப்புதிய அட்டைக்கு, "தேசிய பொது பயன்பாட்டு கையடக்க அட்டை (என்சிஎம்சி)' என்று பெயரிடப்பட்டுள்ளது. இதைப்பண அட்டையாக (டெபிட்) அல்லது கடன் அட்டையாக (கிரெடிட்) பயன்படுத்திக் கொள்ளலாம்.

புதிய ஸ்மார்ட் அட்டையை நாடெங்கிலும் அறிமுகம் செய்வதற்கு மத்திய நகர்ப்புற மேம்பாட்டு துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு ஒப்புதல் அளித்தார்.

அத்துடன், பல்வேறு அமைப்புகளுடன் ஒருங்கிணைந்து செயல் படுவதன் மூலம் குறிப்பிட்ட காலவரம்புக்குள் இந்த அட்டையை அறிமுகம் செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு தனது அமைச்சக அதிகாரிகளுக்கு அவர் உத்தரவிட்டுள்ளார்.

இது குறித்து நகர்ப்புற மேம்பாட்டு அமைச்சக மூத்த அதிகாரி ஒருவர் கூறுகையில், "புதிய ஸ்மார்ட் அட்டைகளில் வேறுபல வசதிகளை இணைக்க ஒத்துழைப்பு அளிக்குமாறு, மாநில அரசுகளிடம் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தியிருக்கிறார்' என்று தெரிவித்தார்.

இதற்கு முன்பாகவே இதேபோன்றதொரு முயற்சி தோல்வியில் முடிந்தது. இதையடுத்து, தனது அமைச்சகத்தின் கூடுதல்செயலாளர் தலைமையில் குழு ஒன்றை வெங்கய்யநாயுடு கடந்த ஆண்டு அமைத்தார்.

நாடெங்கிலும் பல்வேறு விதமான போக்குவரத்து சேவைகளுக்கு பயன்படுத்தும் வகையிலும், பண அட்டையாகவோ அல்லது கடன் அட்டையாகவோ பயன் படுத்தும் வகையிலும் புதிய அட்டை குறித்த பரிந்துரையை வழங்குமாறு அந்தக்குழுவிடம் வெங்கய்ய நாயுடு வலியுறுத்தினார்.

உலகின் பல்வேறு இடங்களில் பயன் படுத்தப்படும் ஸ்மார்ட் அட்டைகள் குறித்து விரிவான ஆய்வு மேற்கொண்ட பிறகு, அந்தக்குழு பரிந்துரைத்த அட்டைக்கு அவர் தற்போது ஒப்புதல் அளித்துள்ளார்.
அனைத்து விதமான போக்கு வரத்து சேவைகளுக்கும், பொருள்களை வாங்குவதற்கும் இந்த அட்டையை பயன் படுத்திக் கொள்ளலாம். இதனால், வாடிக்கையாளர்கள் விதவிதமான பணப் பட்டுவாடா அட்டைகளைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்காது என்று கருதப்படுகிறது.

Tags:

Leave a Reply