கன்னியாகுமரி மாவட்டம், குளச்சல் துறை முகத்தை ரூ.21 ஆயிரம்கோடி செலவில் நாட்டின் பெரிய துறைமுகங்களில் ஒன்றாக விரிவுபடுத்த மத்திய அரசு முன்வந்துள்ளது. இதற்கு முழுஒத்துழைப்பு அளிப்பதாக தமிழக அரசும் அறிவித்துள்ளதாக மத்திய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலை மற்றும் கப்பல்துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் டெல்லியில் தெரிவித்தார்

இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களுக்கு பொன்.ராதாகிருஷ்ணன் அளித்த பேட்டி: குமரி மாவட்டம் குளச்சலில் சிறிய துறைமுகம் இயங்கிவருகிறது. இதை பெரிதாகவிரிவுபடுத்தி கன்னியாகுமரி மாவட்டத்தை தொழில்வளர்ச்சியில் மேம்படுத்த தொடர்ச்சியாக முயன்று வந்தோம். அதற்கு தற்போது பலன்கிடைத்துள்ளது.

குளச்சல்துறைமுக விரிவாக்க பணிகளை ரூ.21 ஆயிரம்கோடி செலவில் செயல்படுத்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது குறித்து மத்திய அமைச்சர் நிதின்கட்கரி, தமிழக முதல்வருக்கு கடிதம் எழுதியிருந்தார். மத்திய அரசின் முடிவுக்கு தமிழகஅரசு சம்மதம் தெரிவித்துள்ளதோடு, முழுஒத்துழைப்பு கொடுத்து திட்டத்தை நிறைவேற்ற உதவுவதாகவும் பதில் தெரிவித்துள்ளது.

சமீப காலத்தில் முதல் முறையாக, மத்திய, மாநில அரசுகள் இவ்வாறு இணைந்து ஒருபணியை தொடங்க முன்வந்துள்ளன. இதற்காக தமிழக முதல்வர் ஜெயலலிதாவுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இப்பணிகள் அதிகபட்சம் 3 ஆண்டுகளுக்குள் தொடங்கும். கொழும்பு மற்றும் சிங்கப்பூர் துறைமுகங்களை நம்பிக் கொண்டிருக்காமல் குளச்சல் துறைமுகத்தில் இருந்து பல நாடுகளுக்கும் சரக்கு ஏற்றுமதிசெய்ய வழி ஏற்படும். இதற்கு வசதியாக துறைமுகத்திற்கு ரயில் மற்றும் சாலைவசதி இணைப்பு ஏற்படுத்தப்படும்.

முதல்கட்டமாக இத்திட்டத்திற்கு ரூ.6628 கோடியை மத்திய அரசு ஒதுக்கும். இந்த திட்டத்தால், குமரி மாவட்டம் மட்டுமின்றி, நெல்லை, விருதுநகர், மதுரை ஆகிய மாவட்டங்களுக்கும் பலன் கிடைக்கும். ஏனெனில் துறைமுகம் மற்றும் அதை சார்ந்த பணிகளுக்கு தேவைப்படும் நிலம் குமரி மாவட்டத்தில் இல்லை. எனவே அண்டை மாவட்டங்கள் அனைத்துமே இத்திட்டத்திற்காக நிலம் அளிக்க வேண்டிவரும். கண்டெய்னர்கள் வரத்து அதிகரிக்கும். வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ள தென் மாவட்டங்களுக்கு இத்திட்டம் வரப்பிரசாதம்.

2000வது ஆண்டிலயே குளச்சல் துறை முகத்தை விரிவுபடுத்த நடவடிக்கைகள் தொடங்கின. ஆனால் நடுவே, இத்திட்டத்தை செயல்படுத்த சாத்தியமில்லை என்று கூறினர். ஆனால் விடாமுயற்சி செய்து திட்டத்தை கொண்டு வந்துள்ளோம். இத்திட்டத்தை தாமதம் செய்ததற்காக யாரையும் நான் குறை சொல்ல மாட்டேன். உதவிய அனைவருக்கும் நன்றி கூறிக்கொள்கிறேன். இதன் பெருமை எனக்கு மட்டுமே சேராது. அனைத்துக் கட்சியினருக்கும் இதில் உரிமையுள்ளது. மேலும், இலங்கையுடன் மீனவர் பிரச்சினை நீண்ட காலமாக உள்ளது. ஆனால், பாஜக அரசு மத்தியில் வந்தபிறகு, தமிழகத்தை சேர்ந்த ஆயிரத்துக்கும் மேற்பட்ட மீனவர்களை விடுதலைசெய்ய வைத்துள்ளோம். மீன்பிடி உரிமை ஏரியா வரையறுக்கப்பட வேண்டும். அப்படி செய்தால்தான் இந்த பிரச்சினை ஓயும். ஆனால், வரையறைசெய்ய இரு தரப்பும் விரும்பவில்லை என்பதே உண்மையான பிரச்சினை. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.