நாட்டின் முக்கியமான, 12 துறை முகங்கள் வசமுள்ள, மூன்று லட்சம் ஏக்கர் நிலத்தை முழுவதுமாக பயன் படுத்தி, துறைமுக நிர்வாகங்களுக்கு கூடுதல்வருவாய் கிடைக்க வகைசெய்ய, புதிய கொள்கையை மத்திய அரசு பின்பற்ற உள்ளது. அதன் படி, துறை முகங்கள் தொடர்பான பணியில் ஈடுபட்டுள்ள நிறுவனங்கள் வசம், துறைமுகங்களின் அருகே உள்ள நிலங்கள், நீண்ட கால அடிப்படையில் ஒப்படைக்கப்படும்; இதன் மூலம் கிடைக்கும் வருவாய், துறை முகங்களின் வருவாயை பெருக்க உதவும்.

ரயில்வேதுறை வசமுள்ள இடங்களில், பயன் படுத்தப்படாத நிலையில் உள்ள இடத்தை, வர்த்தக நடவடிக்கை களுக்கு வழங்கி, கூடுதல்வருவாய் சேர்க்க, மத்திய அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. அது போல, தேசிய நெடுஞ்சாலைகளின் இரு புறமும் பண்ணை மரங்கள், பழமரங்கள், பூஞ்செடிகள் வளர்த்து, அவற்றை விற்பனைசெய்து, சாலைகளின் தரத்தை மேம்படுத்தவும், சாலைகளை பராமரிக்கவும் செலவுசெய்ய, மத்திய அரசு திட்டம் தீட்டியுள்ளது.

அந்தவகையில், துறைமுகங்கள் வசமுள்ள நிலங்களையும் முழுமையாக பயன் படுத்த, திட்டம் தீட்டப்பட்டுள்ளது. மேற்கண்ட இரண்டு மற்றும் துறைமுக நிர்வாகங்களை, பா.ஜ.,வை சேர்ந்த, அமைச்சர் நிதின்கட்காரி கவனித்து வருகிறார்.அத்துறை வல்லுனர்களின் பரிந்துரைபடி, துறைமுகங்களிடம் பயன்படுத்தப்படாமல் உள்ள மற்றும் குறைந்த அளவில் பயன்படுத்தப்படும் நிலங்கள், பயன் பாட்டிற்கு விடப்பட்டு, வருவாயை பெருக்க முடிவாகி உள்ளது.

இது குறித்து பதிலளிக்குமாறு, 12 முக்கிய துறை முகங்கள் அமைந்துள்ள மாநில அரசுகளுக்கு, மத்திய கப்பல் போக்கு வரத்து துறை கடிதம் எழுதிவரும் 29ம் தேதிக்குள், பதிலளிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.இந்த திட்டத்தின் முக்கிய அம்சங்களாவன:

*ஏற்றுமதி – இறக்குமதி தொழிலில் ஈடுபட்டுள்ள, தனியார் நிறுவனங்கள் வசம், துறை முகத்தின் பயன்படுத்தப் படாத நிலங்கள் வழங்கப்படும்

*நிலங்கள் மட்டுமின்றி, துறைமுகத்தின் தண்ணீர் பகுதியும், நீண்ட கால குத்தகை அல்லது வாடகைக்கு வழங்கப்படும்.

*நிறுவனங்களுக்கு வழங்கப்படும் நிலங்களில், சரக்குகளை இருப்புவைத்து கொள்ளலாம்

*இவ்வாறு செய்வதால், இறக்குமதிசெய்த பொருட்களை,உடனடியாக துறைமுகத்திற்கு வெளியே கொண்டுசெல்ல தேவையில்லை. அதுபோல, வெளியிடங்களில் இருந்து ஏற்றுமதிக்காக கொண்டுவரும் பொருட்களை, கப்பல்களில் உடனடியாக ஏற்றத் தேவையில்லை

*இடத்தின் பரப்பளவுக்கு ஏற்ப, விலை நிர்ணயம்செய்யப்படும்
*அந்த இடங்களில், வேறு பணிகளை மேற்கொள்ள முடியாது; ஏற்றுமதி – இறக்குமதி தொடர்பான பணிகளை மட்டுமே மேற்கொள்ள முடியும்.இவ்வாறு, இந்த திட்டத்தில் பல முக்கிய அம்சங்கள் உள்ளன.

நாட்டில் உள்ள, சிறியதும், பெரியதுமான துறை முகங்கள் வசம், மூன்று லட்சம் ஏக்கர் நிலம் உள்ளது. மும்பை துறைமுக நிர்வாகத்திடம், 1,900 ஏக்கர் உள்ளது; அவற்றின் மதிப்பு, 46 ஆயிரம் கோடி ரூபாய்.அதுபோல, தமிழகத்தில் உள்ள, சென்னை, எண்ணுார் மற்றும் துாத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகங்கள் வசம், 4,700 ஏக்கர் நிலம் உள்ளது.இதில், சென்னை துறை முகம் வசம், 600 ஏக்கர், எண்ணுாரில், 2,000 ஏக்கர், துாத்துக்குடியில், 2,100 ஏக்கர் நிலம் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.