இந்தியாவில் வேலை வாய்ப்புகளை உருவாக்கும் துறைகளில் துணிச்சலுடன் முதலீடுசெய்யுமாறு தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். டெல்லியில் உள்ள இந்திய தொழில்வர்த்தக சபையில், நேற்று நாட்டின் முக்கியதொழில் அதிபர்களுடன் பிரதமர்

நரேந்திர மோடி முக்கிய ஆலோசனை கூட்டம் ஒன்றை நடத்தினார். இதில், உலகளாவிய பொருளாதார மந்தநிலை குறித்தும் இந்தியாவில் அதன் தாக்கம் குறித்தும் தொழில் துறையினர் மற்றும் பொருளாதார நிபுணர்களுடன் மோடி விவாதித்தார்.

இந்த கூட்டத்தில் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி, டாடா குழும தலைவர் சைரஸ் மிஸ்த்ரி, ஆதித்ய பிர்லா குழும தலைவர் குமாரமங்கலம் பிர்லா, பார்தி ஏர்டெல் நிறுவனத்தின் சுனில் பார்தி மிட்டல், ஐ.டி.சி. நிறுவனத்தின் தலைவர் ஒய்.சி.தேவேஷ்வர் உள்ளிட்ட தொழில் அதிபர்கள் கலந்து கொண்டனர். இவர்கள் தவிர இந்திய ரிசர்வ் வங்கியின் கவர்னர் ரகுராம்ராஜன், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் தலைமை செயல் அதிகாரி சந்தா கொச்சார், இந்திய ஸ்டேட் வங்கி தலைவர் அருந்ததி பட்டாச்சாரியா, பொருளாதார வல்லுனர் சுபிர் கோகரான், தலைமை பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்பிரமணியன், நிதி அயோக் துணைத்தலைவர் அரவிந்த் பனக்ரியா போன்றோரும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்றனர்.

இந்த ஆலோசனைக் கூட்டம் சுமார் 3 மணி நேரம் நடைபெற்றது. இதில், சமீபத்திய உலகளாவிய சம்பவங்கள், இந்தியா மீது அவற்றின் தாக்கங்கள், இந்தியாவுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதிக்கப்பட்டது. இந்தக் கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், 'வேலை வாய்ப்புகளை உருவாக்கத்தக்க துறைகளில் தொழில் துறையினர் துணிச்சலுடன் முதலீடுகளை செய்ய வேண்டும்' எனக் கேட்டுக் கொண்டார். குறைந்த செலவில் பொருட்களை தயாரிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அப்போது அவர் பேசினார்.

மேலும், அந்த கூட்டத்தில் பிரதமர் மோடி உலக அளவில் நிலவும் பொருளாதார குழப்பங்களை, நம் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். வேலை வாய்ப்புகளை அதிகரிக்கும் தொழில்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் உள்ளூர் சந்தைக்கு பாதிப்பு ஏற்படாதவகையில், தொழில் துறை உற்பத்தி இருக்கவேண்டும் விவசாய துறைக்கு முக்கியத்துவம் அளிக்கவேண்டும்; நீர்ப்பாசன திட்டங்களை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் உணவு பதப்படுத்துதல் துறையில் அதிக முதலீடு செய்யவேண்டும் சுற்றுலாவை மேம்படுத்த வேண்டும். என்று மோடி வழியுறுத்தி பேசினார்

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.