கருப்புபண விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. அதைகண்டு ஊழல் புரிந்தவர்கள் பீதி அடைந்துள்ளனர், அதனால், மத்திய அரசின் பல நல்ல திட்டங்களுக்கு முட்டுக் கட்டை போடுகின்றனர்'' என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சுமத்தினார்.

சமீபத்தில் நடந்த காங்கிரஸ் செயற் குழுக்கூட்டத்தில் பேசிய கட்சி தலைவர் சோனியா, ''நாடாளுமன்ற தேர்தலின் போது பிரதமர் மோடி வாக்குறுதிகளாக அள்ளிவீசினார். அவை எல்லாம் வெற்று பேச்சுகள். செயலில் ஒன்றும் காணவில்லை'' . 'ஹவாபாஸி' (சவடால் பேர்வழி) என்று மோடியை சோனியா விமர்சித்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், ''நான் ஹவாபாஸி என்றால், அவர்கள் 'ஹவாலாபாஸி' (ஊழல் பேர்வழிகள் ) என்று மோடி கடுமையாக கூறியுள்ளார்.

பாஜக நிர்வாகிகளிடம் மேலும் அவர் பேசியதாவது , ''கடந்த 2014-ம் ஆண்டு தேர்தல்தோல்வியில் இருந்து காங்கிரஸால் மீண்டு வர முடியவில்லை. அதற்காக அரசு நடவடிக்கைகளுக்கு முட்டுக்கட்டை போடும் தந்திரத்தை கையாண்டு வருகிறது. கருப்புபண விவகாரத்தில் மத்திய அரசு கடும் நடவடிக்கை எடுத்துவருகிறது. இதனால் ஊழல் வாதிகள் பீதி அடைந்துள்ளனர். அரசு கொண்டுவந்துள்ள மசோதாக்களுக்கு முட்டுக்கட்டை போடுகின்றனர்'' .

கடந்த மழைக் கால நாடாளுமன்ற கூட்டத்தொடர் முற்றிலும் முடங்கியதற்கு காங்கிரஸ் தான் காரணம். சரக்கு மற்றும் சேவைவரி மசோதாவை ஏற்க மற்ற எதிர்க் கட்சிகள் ஒப்புக் கொண்டன. ஆனால், ஒரே ஒரு கட்சி (காங்கிரஸ்) மட்டும் நாடாளுமன்றத்தை நடத்தவிடாமல் முட்டுக்கட்டை போட்டது. சண்டை போடுவதற்கென்று தனி இடம் உள்ளது. தேர்தலில் மக்கள் புறக்கணித்த ஒருகட்சி நாடாளுமன்றத்தை முடக்குவது சரியல்ல. அவையை நடத்தவிடுங்கள் என்று பகிரங்கமாக நான் வேண்டுகோள் விடுத்தேன். எனினும் அந்த கட்சி கேட்கவில்லை.

உலகநாடுகள் பொருளாதார நெருக்கடியில் சிக்கி உள்ளன. ஆனால், இந்தியா மட்டும் தனது சொந்தக்காலில் பலமாக நிற்கிறது. இந்த சந்தர்ப்பத்தை நாம் முழுமையாக பயன்படுத்தி கொண்டு நாட்டை வளர்ச்சி பாதைக்கு கொண்டுசெல்ல வேண்டும். இந்த வாய்ப்பை நாம் வீணடிக்க கூடாது. வரும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடரில் எதிர்க்கட்சிகள் நாட்டின் நலன்கருதி செயல்படும் என்று நம்புகிறேன்.

தேர்தலில் தோல்வி அடைந்தால்,கட்சியை எப்படி பலப்படுத்துவது என்று சுய ஆய்வு செய்வது தான் அரசியல் கட்சிகளுக்கு நல்லது. மக்கள் ஒருகட்சியை 5 ஆண்டு ஆட்சிசெய்ய தேர்வுசெய்தால், அதை மற்ற அரசியல் கட்சிகள் மதிக்க வேண்டும். கடந்த 1984-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் 2 இடங்களில் மட்டுமே பாஜக வெற்றிபெற்றது. அதை அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்தி கிண்டல் செய்தார். அப்போது ஏன் இந்ததோல்வி என்று பாஜக ஆராய்ந்தது. மற்றவர்கள் மீது பழி போடவில்லை. கட்சியை சுய ஆய்வுசெய்தோம்.

இப்போது 30 ஆண்டுகளுக்குப் பிறகு தனிப்பெரும்பான்மையுடன் பாஜக ஆட்சி அமைய மக்கள் தீர்ப்பளித்துள்ளனர். பாஜக ஆட்சியில் தேசிய ஜனநாயக கூட்டணி அரசு எதுவும் செய்ய வில்லை என்று காங்கிரஸ் கூறுகிறது.

சமையல் காஸ் சிலிண்டருக்கான மானியம் நுகர்வோர்களின் வங்கிகணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. அத்துடன் ஜன் தன் யோஜனா, முத்ரா வங்கி உட்பட பலதிட்டங்கள் சாதாரண மக்களுக்காக அமல்படுத்தப்பட்டுள்ளது. எந்த ஆரவாரமும் இல்லாமல், விளம்பரம் இல்லாமல், சாதாரண மக்களின் நலனுக்காக இந்த அரசு பல திட்டங்களை கொண்டு வந்துள்ளது. இவ்வாறு மோடி பேசினார்.

Tags:

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.