மதுவினால் ஏற்படும் தீமைகள் குறித்து மக்களிடம் விழிப் புணர்வு ஏற்படுத்துவதற்காக மதுக்கடைகள் முன்பு ஒருமாதம் பிரச்சாரம் செய்ய தமிழக பாஜக முடிவுசெய்துள்ளது.

சென்னை வடபழனியில் உள்ள டாஸ்மாக் மதுக் கடை முன்பு இந்த பிரச்சாரத்தை தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் நேற்று தொடங்கி வைத்தார்.

மது அருந்துவதால் உருவாகும் உடல் நல பாதிப்புகள் அடங்கிய துண்டுபிரசுரங்களை பாஜகவினர் டாஸ்மாக் கடைக்கு வந்தவர்களிடம் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் தமிழிசை சவுந்தரராஜன் கூறியதாவது:

தமிழகத்தில் உள்ள 6 ஆயிரத்துக்கும் அதிகமான டாஸ்மாக் மதுக் கடைகள் முன்பு இன்று (செப். 10) முதல் அக்டோபர் 10-ம் தேதிவரை மதுவுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் செய்ய இருக்கிறோம்.

மதுவுக்கு எதிராக மக்கள் போராடிவரும் நிலையில் முதல்வர் ஜெயலலிதா மது விலக்கை அறிவிப்பார் என எதிர்பார்த்தோம். ஆனால், அதற்கான அறிகுறியே இல்லை. எனவே, மக்களை சந்தித்து மதுவின் அபாயங்களை விளக்க முடிவு செய்து ள்ளோம்.

மதுக்கடைகள் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ. 26 ஆயிரம்கோடி வருமானம் வருகிறது. தமிழக அரசு நடத்திய உலக முதலீட்டாளர்கள் மாநாடுமூலம் ரூ. 1 லட்சம் கோடிக்கும் அதிகமாக முதலீடுகள் குவிந்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படி முதலீடுகள் குவியும்போது டாஸ்மாக் மூலம் கிடைக்கும் வருமானம் எதற்கு? எனவே, இந்த மாநாட்டின் வெற்றிபரிசாக டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் அறிவிப்பை தமிழக அரசு வெளியிட வேண்டும்.

மதுவுக்கு அடிமையானவர்களுக்கு சிகிச்சை அளிக்க தமிழகம் முழுவதும் போதைமறுவாழ்வு மையங்களை தொடங்க வேண்டும் இவ்வாறு தமிழிசை கூறினார்.

Leave a Reply