நேற்றைய தினம் இரண்டு நாட்களாக நடந்த முதலீட்டாளர்கள் மாநாடு எதிர்பார்ப்புடன் நிறைவடைந்திருக்கிறது. ஒரு இலட்சம் கோடி முதலீடு கிடைக்கும் என்று கணித்து அதன் பின்பு இரண்டு மடங்காக உயர்வதற்கான சாத்தியக்கூறுகளோடு நிறைவடைந்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. எவ்வளவோ விமர்சனங்கள் இருந்தாலும், வியப்படையும் வகையில் இதனை நடத்தி காண்பித்திருப்பது வரவேற்க்கதக்கது.

குறிப்பாக தென் தமிழகத்திற்கு ஷிவ் நாடார் போன்றவர்கள் அதிக முதலீடு கொண்டு வருவோம் என்று சொன்னதும் மேலும் முதலீடு செய்யப்படும் தொகையில் பெரும்தொகை தென் தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்படும் என்பதும், அதன்மூலம் தென்தமிழகத்தின் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்கும் என்பதும் உண்மையிலேயே மகிழ்ச்சி அளிக்கும் செய்திகளாகும்.

அதைதொடர்ந்து முதலமைச்சர் அவர்களும் தென் தமிழகத்தில் முதலீடு செய்வதற்கு பலவகைகளில் ஊக்கப்படுத்தப்படும் என்று சொன்ன செய்தி பலநாட்களாக தேய்ந்து போன தெற்கு தமிழகம் பொருளாதாரத்தில் தேறி வருவதற்கான அறிகுறிகளாக தென்படுகிறது. தமிழகம் மிகைமின் மாநிலமாக மாறும் என்ற செய்தி உண்மையாக நிருப்பிக்கப்பட்டு, நடந்தும் காண்பிக்கப்பட்டால் நலிவடைந்த தொழிற்சாலைகள் மேன்மைபெறும்.

டிஜிட்டல் இந்தியா மூலம் மேலும் ஒன்றை இலட்சம் (1½) சேவை மையங்கள் நிறுவப்படும் என்ற செய்தி மத்திய, மாநில அரசுகள் இணக்கமாக செயல்பட்டால் மக்களுக்கு பயன் கிடைக்கும் என்பதற்கு ஓர் முன்னுதாரணம். மாநிலத்தில் ஆளுங்கட்சி, எதிர்கட்சியாக இருந்தால் மத்திய அரசு ஒத்துழைக்க மறுக்கிறது என்ற குற்றச்சாட்டு கடந்த ஆட்சியில் நிலவியது.

ஆனால் மோடி அவர்களின் அரசு மாநிலத்தை ஆள்வது எதிர்கட்சியாக இருந்தாலும், மக்கள் நலனுக்காக மாநில அரசோடு இணைந்து செயல்படுவதில் நலம் பயக்கும் என்ற கொள்கையோடு செயல்படுவதால் தமிழக முதல்வர் அவர்களை பிரதமர் அவர்கள் சந்தித்தார்கள். இந்த முதலீட்டாளர்கள் கூட்டத்தில் கூட மத்திய அமைச்சர்கள் ஆன நிர்மலா சீதாராமன், பொன் இராதாகிருஷ்ணன் அவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள்.

இன்று இந்த அளவிற்கு முதலீட்டாளர்கள் நம்மிக்கையோடு நாடி வருவதற்கு பாரத பிரதமர் உலக நாடுகளுக்கு சென்று ஒரு நம்பிக்கையை அவர்கள் மனதில் விதைத்திருப்பதும் ஒரு காரணம். ஆக இந்த முதலீட்டார்கள் மாநாடு முதல் கட்டத்திலேயே நின்று விடாமல் அதில் திட்டமிட்ட, உறுதி செய்யப்பட்ட முதலீடுகள், நிறுவனங்கள் நிறுவுவதற்கான ஏற்பாடுகள் மற்றும் அவர்களுக்கு உடனடியாக அமைக்கப்பட வேண்டிய கட்டமைப்பு வசதிகள் குறிப்பிட்ட காலத்திற்குள் தமிழகத்தில் பொருளாதாரம் மேம்படுவதற்கு துரித நடவடிக்கையாக உருவாக்கப்பட வேண்டும். அதன் மூலம் பல இலட்சக்கணக்கான இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகள் நேரடியாகவும், மறைமுகமாகவும் உடனடியாக கிடைக்கும்.

மிக முக்கியமாக முதலீட்டாளர்கள் மாநாடு நடத்துவதற்கு எவ்வளவு அக்கறை எடுத்துக்கொள்ளப்பட்டதோ, அதே அக்கறையுடன் எந்த சுணக்கமும் இல்லாமல் முதலீட்டாளர்களுக்கு இணக்கமான சூழ்நிலையை ஏற்படுத்தி, முழுமையான கண்காணித்து நடைமுறைப்படுத்துவது தமிழக அரசின் தலையாய கடமையாக இருக்க வேண்டும்.

அப்பொழுது தான் முதலீட்டாளர்கள் மாநாடு நடத்தப்பட்டதின் முக்கிய நோக்கம் முழுமையாக நிறைவேறும்.
என்றும் மக்கள்;; பணியில்

(Dr. தமிழிசை சௌந்தரராஜன்)

Tags:

Leave a Reply