பிகார் சட்டமன்ற தேர்தல் அறிவிக்கப் பட்டுள்ள நிலையில், வானொலியில் பிரதமர் நரேந்திரமோடி உரையாற்றும் "மன் கி பாத்" நிகழ்ச்சிக்கு தடை கோரப்போவதாக காங்கிரஸ் கூறியுள்ளது.

ஆனால், அந்நிகழ்ச்சிக்கு தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணையம் மறுத்துவிட்டது. நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்ற பின், வானொலியில் மாதந்தோறும் நாட்டுமக்களிடம் உரையாற்றுகிறார். மனதில் இருந்து (மன் கி பாத்) என்ற தலைப்பில் அவர் உரை நிகழ்த்திவருகிறார். இதில் பொது மக்கள் கூறும் பல யோசனைகள் குறித்து மோடி பேசி வருகிறார்.

இந்நிலையில், பிகார் சட்டப் பேரவை தேர்தல் அறிவித்துள்ளதையடுத்து, அரசு ஊடகமான வானொலியில் மோடி பேசினால், அது தேர்தல் நடத்தை விதி மீறலாகும் என்று காங்கிரஸ் கூறியுள்ளது. இந்தமாதம் வரும் ஞாயிற்றுக்கிழமை வானொலியில் உரை நிகழ்த்த உள்ளார் மோடி. இந்நிலையில், மோடி உரைக்கு தடைவிதிக்குமாறு தேர்தல் ஆணையத்திடம் முறையிடுவோம் என்று காங்கிரஸ் மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் கூறியுள்ளன.

ஆனால், அப்படி எதுவும் தடைவிதிக்க முடியாது என்று தேர்தல் ஆணைய வட்டாரங்கள் கூறியுள்ளன. ஹரியாணா சட்டப் பேரவை தேர்தலின்போது கூட இதே போன்ற புகாரை காங்கிரஸ் கூறியது. அப்போது, பிரதமர் உரையை (பதிவு செய்யப்பட்ட டேப்மூலம்) நாங்கள் தீவிரமாக ஆய்வுசெய்தோம். அதில், தேர்தல் நடத்தைவிதியை மீறியோ அல்லது ஆட்சேபனைக்குரிய வகையிலோ மோடி எதுவும் பேசியிருக்கவில்லை என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

Tags:

Leave a Reply