சென்னையில் இருந்து இலங்கையின் தலை மன்னார் வரை முன்பு 'போட்–மெயில்' என்ற ரெயில் இயக்கப்பட்டது. இந்தரெயில் சென்னையில் இருந்து புறப்பட்டு ராமேசுவரம் வழியாக தனுஷ் கோடி சென்றது. அங்கிருந்து கப்பல் மூலம் பயணிகள் தலை மன்னார் அழைத்துச் செல்லப்பட்டனர்.

இதன் மூலம் சென்னையில் இருந்து கொழும்புவரை ஒரே டிக்கெட்டில் பயணம் செய்தனர்.

வித்தியாசமான பயண அனுபவத்தை தந்த இந்த 'போட்மெயில்' சேவை 1964–ம் ஆண்டு தனுஷ்கோடியை அழித்த புயல் காரணமாக நிறுத்தப்பட்டது. ரெயில்கள் ராமேசுவரம் வரை மட்டுமே சென்றுவருகின்றன.

அதன் பிறகு ராமேசுவரம்–பாம்பன் இடையே கடலில் பாலம் அமைக்கப்பட்டு தரைமார்க்கமாக இணைக்கப்பட்டது.

தற்போது ராமேசுவரத்தில் இருந்து இலங்கைக்கு கடலில் பாலம்கட்டி சாலை அமைக்கும் மிகப்பெரிய திட்டத்தை தொடங்க முடிவு செய்துள்ளது.

டெல்லியில் கடந்த ஜூலை மாதம் நடந்த சாலை போக்குவரத்து தொடர்பான மாநாட்டில் மத்திய கப்பல் மற்றும் சாலை போக்கு வரத்து அமைச்சர் நிதின் கட்காரி இந்த திட்டத்தை அறிவித்தார்.

அவர் பேசுகையில், அண்டை நாடுகளுடன் வர்த்தக ரீதியான உறவை பலப் படுத்த போக்குவரத்து இணைப்பு வசதி முக்கியமானதாக கருதப்படுகிறது. வங்கதேசம், பூடான், நேபாளம் ஆகிய நாடுகளைத் தொடர்ந்து இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே தரைவழியாக போக்குவரத்து இணைப்பு ஏற்படுத்தப்படும் .

இதற்காக ராமேசு வரத்தில் இருந்து இலங்கைக்கு 23 கி.மீ. தூரத்துக்கு கடல்பாலம் அமைத்து சாலை அமைக்கும் திட்டம் உள்ளது என்றும் இதற்காக ஆசிய வளர்ச்சி வங்கி நிதி உதவி அளிக்க முன்வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தற்போது டெல்லி வந்துள்ள இலங்கை பிரதமர் ரனில் விக்ரமசிங்கேயும் மத்திய மந்திரி நிதின்கட்காரியும் சந்தித்து இந்த திட்டம்பற்றி ஆலோசனை நடத்தினார்கள்.

அப்போது ராமேசுவரத்தையும், இலங்கையின் தலைமன்னாரையும் 'பாக் ஜலசந்தி' வழியாக கடல் பாலம் மூலம் இணைக்கும் திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டது.

ராமேசு வரத்துக்கும் தலைமன்னாருக்கும் இடையேயான 23 கி.மீ. தூரத்துக்கு கடலுக்குமேல் பாலம் அமைத்தும், கடலுக்கு அடியில் சுரங்கம் அமைத்தும் இந்ததிட்டத்தை நிறைவேற்ற முடிவு செய்யப்பட்டது.

கடலில் நீர்மட்டம் குறைவான பகுதியில் ராட்சத தூண்கள் அமைத்தும் ஆழமான பகுதியில் சுரங்கம் அமைத்தும் பாலம் கட்டப்படுகிறது.

இதற்கு ரூ.35 ஆயிரம்கோடி செலவாகும் என்று மதிப்பிட பட்டுள்ளது. இந்த திட்டம் நிறைவேறினால் தெற்காசிய நாடுகள் ('சார்க்') சாலை போக்குவரத்து மூலம் இணைக்கப்பட்டு விடும்.

முன்பு தென் மாவட்டத்தை சேர்ந்தவர்கள் இலங்கையுடன் நெருங்கிய வாணிப தொடர்பு வைத்திருந்தனர். கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டதாலும் பல்வேறு பிரச்சினைகளாலும் வாணிபதொடர்பு துண்டிக்கப்பட்டது.

தற்போது மத்திய அரசு நிறைவேற்ற முடிவுசெய்துள்ள இந்த கடல் பாலம் திட்டத்தால் தமிழகம் குறிப்பாக தமிழகத்தின் தென் மாவட்டங் களுக்கும், இலங்கைக்கும் இடையே மீண்டும் வாணிபதொடர்பு ஏற்படும் வாய்ப்பு உருவாகி உள்ளது. இந்த கடல்பாலம் திட்டம் நிறைவேறினால் தென் மாவட்டங்கள் வளர்ச்சி அடையும். வளம்பெறும் என்று மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையே மத்திய சிறு மற்றும் குறுந் தொழில் துறை மந்திரி கல்ராஜ்மிஷ்ரா ராமேசுவரம் வந்தார். ராமநாதசாமி கோவிலில் சாமி தரிசனம் செய்து தனுஷ்கோடி சென்று திரும்பினார்.

அங்கு அவர் நிருபர்களிடம் கூறும் போது, ராமேசுவரம்–தலைமன்னார் இடையே கடல் வழியாக ரூ.35,000 கோடி செலவில் ரோடுபாலம் அமைக்கப்படும் என்று மத்திய மந்திரி நிதின்கட்காரி அறிவித்து இருந்தார். கடல் பாலம் அமைவது உறுதி. இந்த திட்டம் உறுதியாக செயல்படுத்தப்படும். இதற்கான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

Tags:

Leave a Reply