சுகாதார வசதிகளுக்கு முக்கியத்துவம் தருவதன் மூலம், பிரதமர் நரேந்திரமோடி தடைகளை உடைத் தெறித்து வருகிறார் என்று ஐ.நா. சபையின் பொதுச்செயலர் பான்-கீ-மூன் பாராட்டு தெரிவித்தார்.

மும்பையில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய "வாழ்க்கைக்கான நீர்' என்ற கண்காட்சிக்கு, பான்-கீ-மூன் அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:

சுகாதார, பொது ஆரோக்கிய வசதிகளை மேம்படுத்த இந்தியா நடவடிக்கை எடுத்துவருகிறது. அனைவருக்கும் சுகாதாரவசதிகள் சென்றடைவதற்கு, அரசியல் உறுதியும், புதுமையான அணுகு முறைகளும், சமுதாய மாற்றங்களும் அவசியமாகும். அனைவருக்கும் சுத்தமான நீரும், சுகாதார வசதிகளும் சென்றடைவதற்கு விஞ்ஞானிகள், கொள்கை வகுப்பாளர்கள் என்று அனைத்து தரப்பினரும் ஒருங்கிணைந்து பணியாற்றவேண்டும். இந்நிலையில், இந்த கண்காட்சி ஏற்பாடு செய்யப் பட்டிருப்பது வரவேற்கத்தக்கது.

ஆயிரமாவது ஆண்டு வளர்ச்சித்திட்டத்தின் கீழ், 230 கோடி மக்களுக்கு சுத்தமான குடி நீர் வசதி கிடைத்துள்ளது. மேலும், 190 கோடி மக்களுக்கு தரமான சுகாதாரவசதிகள் கிடைத்துள்ளது. சுத்தமான குடி நீரையும், பாதுகாப்பான சுகாதார வசதிகளையும் பெறுவது மனித உரிமையாகும் என்று ஐ.நா. பொதுச்சபை அறிவித்த பிறகு, இந்த நடவடிக்கைகள் கணிசமாக வேகமடைந் துள்ளன. நச்சுத்தன்மை கலந்த பாதுகாப்பற்ற குடிநீர், மோசமான சுகாதாரவசதிகள் ஆகியவற்றின் காரணமாக, நாள்தோறும் 5 வயதுக்குள்பட்ட சிறுவர்கள் 1,000 பேர் உயிரிழக்கின்றனர்.

போதிய சுகாதார வசதிகள் இன்னும் கிடைக்காமல் 250 கோடி மக்கள் தவிக்கின்றனர். மேலும், 100 கோடி மக்கள் திறந்த வெளியில் இயற்கை உபாதைகளை கழிக்கவேண்டிய நிலைமை இன்னமும் நீடிக்கிறது என்று அந்தச் செய்தியில் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply