பிரதமர் நரேந்திரமோடி தலைமையில் மத்திய மந்திரி சபை கூட்டம், டெல்லியில் நேற்று நடந்தது.இந்த கூட்டத்துக்கு பின்னர் மத்திய தொலைத்தொடர்பு மந்திரி ரவிசங்கர் பிரசாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறுகையில், "குண்டு வெடிப்புகளையும், தாக்குதல்களையும் நடத்தி வருகிற 'நாகா' தீவிரவாத இயக்கத்தை (என்எஸ்சிஎன்-கே) சட்டவிரோத இயக்கமாக அறிவித்து, 5 ஆண்டு காலத்துக்கு தடை விதிக்க மத்திய மந்திரிசபை ஒப்புதல் அளித்துள்ளது. சமீப காலமாக இந்த இயக்கத்தினர் மேற்கொண்டுவந்த நடவடிக்கைகளின் அடிப்படையில் நீண்ட ஆலோசனைக்கு பின்னர் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது"

"தேசிய ஜனநாயக கூட்டணி அரசு, வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அறிவித்த கொள்கைப்படி, வடகிழக்கு மாநிலங்களில் அனைத்து போராளி குழுக்களுடனும் பேசுவதற்கு விரும்புகிறது" என்றார்.

மணிப்பூரில் கடந்த ஜூன் மாதம் 4-ந் தேதி நாகா தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் தான் நாகா இயக்கத்தை தடைசெய்வதற்கு மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

மத்திய மந்திரிசபை கூட்டத்தில் எடுக்கப்பட்ட பிறமுக்கிய முடிவுகள் வருமாறு:-

* கிராமப் புறங்களில் பொருளாதார, சமூக, உள்கட்டமைப்பு வளர்ச்சிக்காக சியாமபிரசாத் முகர்ஜி கிராமப்புற மேம்பாட்டு திட்டத்தின்படி ரூ.5 ஆயிரத்து 142 கோடியை விடுவிப்பதற்கு ஒப்புதல் வழங்கபட்டது.

* மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புறுதி திட்டத்தின் கீழ் ஆண்டுக்கு 100 நாட்கள் வேலை வழங்கி வந்ததை அதிகரித்து, வறட்சி நிலவும் இடங்களில் 150 நாட்கள் வேலை வழங்குவதற்கு மத்திய மந்திரி சபை ஒப்புதல் அளித்தது.

* காசோலை மோசடி வழக்குகளில் வழக்கு தொடரக் கூடிய நீதிமன்ற எல்லை தொடர்பான மாற்று முறை ஆவணச்சட்ட (திருத்த) அவசரசட்டம் கொண்டு வருவதற்கு மத்திய மந்திரிசபை ஒப்புதல் வழங்கியது. இதன்படி காசோலையை பெற்றவர், அது வங்கியில் பணம் இல்லை என திரும்ப வருகிற போது, தான் இருக்கிற இடத்திலேயே வழக்குதொடர வழி பிறக்கும். காசோலையை யார் வழங்கினாரோ, அவரது வங்கி கிளை அமைந்துள்ள இடத்திற்கு சென்று வழக்குதொடர்கிற நிலை இருக்காது.

Leave a Reply