தமிழகத்தில் பா.ஜனதா கட்சியின் ஒருலட்சம் தொண்டர்களுக்கு தேர்தல் பயிற்சி அளிக்கவுள்ளதாக தமிழக பொறுப்பாளர் முரளிதர ராவ் கூறினார்.

தமிழக பா.ஜனதா கட்சியின் தேர்தல் மேலாண்மைகுழு கூட்டம் நேற்று காலை கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இதில் மத்திய மந்திரிகள் பொன் ராதாகிருஷ்ணன், பண்டாரு தத்தாத்ரேயா, மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தர ராஜன், மூத்த தலைவர் இல.கணேசன், தேசிய செயலாளர்கள் முரளிதர ராவ், எச்.ராஜா உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

கூட்டமுடிவில், பா.ஜனதா தேசிய செயலாளர் மற்றும் தமிழக பொறுப்பாளரான முரளிதரராவ் நிருபர்களிடம் கூறியதாவது:-

தமிழகத்தில் உள்ள 234 சட்ட சபை தொகுதிகளிலும் கட்சியை பலப்படுத்த, தொகுதிக்கு ஒருகுழு அமைக்கப்பட உள்ளது. தமிழகம் முழுவதும் ஒரு லட்சம்பேருக்கு தேர்தல் பணி குறித்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது. எங்களது பிரசாரகுழுவினர் மக்களை நேரடியாக சந்தித்து மாநில, மண்டல, மாவட்ட அளவிலான பிரச்சினைகளை கண்டறிந்து தீர்வு காண நடவடிக்கை எடுப்பார்கள்.

பிரதம மந்திரியின் முத்ரா வங்கி திட்டத்தின் மூலம் சிறு வியாபாரிகளுக்கு ரூ.20 ஆயிரம் கோடி கடன்வழங்கப்பட உள்ளது. சிறு வியாபாரிகளுக்கு 5 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் வரை 'சிசு' திட்டத்தின் மூலமும், 50 ஆயிரம் முதல் 5 லட்சம் ரூபாய் வரை 'கிஷோர்' திட்டத்தின் மூலமும், 5 லட்சம் ரூபாய்க்கு மேல் 'தருண்' திட்டத்தின் மூலமும் கடன் வழங்கப் படுகிறது. முதல் கட்டமாக வருகிற 25-ந்தேதி முதல் அக்டோபர் 2-ந்தேதி வரை மக்களிடம் இதனை பிரபலப் படுத்த உள்ளோம்.

தமிழகத்தை பொறுத்த வரையில், தேசிய ஜனநாயக கூட்டணி அப்படியே நீடிக்கிறது. பாமக. முதல்வர் வேட்பாளரை அறிவித்துள்ளதே தவிர தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து விலகி விட்டதாக அறிவிக்கவில்லை. தேர்தல் வரும் போது, இந்த நிலைப்பாடு மாறக்கூடும்.

விரைவில் எங்கள் கூட்டணியில் வேறு சிலகட்சிகளும் இணைய உள்ளன. தமிழகத்தில் பா.ஜ.க தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அதிமுக., தி.மு.க.வுக்கு மாற்று அணியாக அமையும்.

காவிரி நதி நீர் பிரச்சினை நாட்டின் ஒற்றுமை சார்ந்தவிஷயம். இதனை குறுகிய கண்ணோட்டத்தோடு பார்க்காமல், அரசியலுக்கு அப்பாற்பட்டு இருமாநில முதல்-அமைச்சர்களும் பேசி முடிவெடுக்க வேண்டும் என பிரதமர் நரேந்திரமோடி விரும்புகிறார்.

இலங்கை பிரச்சினையில் தமிழர் நலனுக்காக ராஜ தந்திரத்துடனும், நாட்டின் பாதுகாப்பு சார்ந்தும் கடந்த 1½ ஆண்டு காலமாக மத்தியஅரசு செயல்பட்டு வருகிறது. தமிழக மீனவர்கள் பிரச்சினையில் தமிழர்களுக்கு பாதிப்பு இல்லாமலும், இலங்கை தமிழ் மீனவர்களின் வாழ் வாதாரத்தையும் கருத்தில் கொண்டு நல்ல முறையில் முடிவு எடுப்போம்.

பீகார் தேர்தல் முடிவடைந்ததும், தமிழக தேர்தலையொட்டி பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் அனைவரும் தமிழகம் வர உள்ளனர் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.