குமரிமாவட்டம் குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமைத்தே தீரவேண்டும் என்ற நோக்கத்தில் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்துவருகிறேன். இதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இதனை மாவட்ட மக்கள் வரவேற்றுள்ளனர். அனைத்து தரப்பினரும் பாராட்டுகிறார்கள்.

குமரி மாவட்ட ஜமாத்கூட்டமைப்பு நிர்வாகிகள் இதனை வரவேற்று எனக்கு நன்றி தெரிவித்துள்ளனர். ஜமா அதுல் உல்மா பேரவை நிர்வாகிகளும் பாராட்டு தெரிவித்துள்ளனர். இவர்கள் அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.

குளச்சலில் வர்த்தக துறைமுகம் அமையும் போது, குமரி மாவட்டம் இந்தியாவின் நுழைவுவாயிலாக மாறும். இப்போதைய மக்களின் எதிர் கால சந்ததியினர் இதன் மூலம் பயன்பெறுவர்.

துறைமுக பணிகளுக்காக மாநில முதல்வரும் துணைநிற்கிறார். மத்திய, மாநில அரசுகளின் பல்வேறு துறைகளிடம் இருந்து சிலபணிகளுக்கான ஒப்புதல் பெறவேண்டியது இருக்கிறது. இதற்காக மீண்டும் ஒருமுறை தமிழக முதல்வரை சந்தித்துபேச திட்டமிட்டுள்ளேன்.

துறைமுக பணிக்காக ரெயில்பாதை மற்றும் சாலை அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்க இருக்கிறது. மேலும் 4 வழிச் சாலை பணிக்கான நிலம் கையகப்படுத்தும் பணி இன்னும் ஒரு மாதத்தில் முடிவடையும் என்று நம்புகிறேன்.

சுசீந்திர பாலம் கட்டுமான பணி தொடங்கிவிட்டது. இதனை அடிக்கடி சென்று ஆய்வுசெய்து வருகிறேன். பாலம் அமைய உள்ள பகுதி ஆற்றுப் படுகையாகவும், கடல் நீர் உட்புகும் பகுதியாகவும் காணப்படுவதால் கட்டுமானப் பணிக்கு பயன்படுத்தப்படும் இரும்பு கம்பிகள் துருப்பிடிக்காத கம்பிகளாக இருக்கவேண்டும் என்று பால கட்டுமானப் பணி ஒப்பந்தத்தாரர் அறிவுறுத்தப்பட்டுள்ளார். எனவே அவர், புதிய துருப்பிடிக்காத கம்பிகளை கொள்முதல் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளார்.

குழித்துறை நகராட்சியை கண்டித்து பாரதீய ஜனதாவின் ரத்தினமணி மற்றும் ஜாண் பிரிட்டோ என்ற 2 கவுன்சிலர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இதில் மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும்.

தி.மு.க. பொருளாளர் மு.க. ஸ்டாலின் தொடங்கி உள்ள நமக்கு நாமே பயணத்தை பாராட்டுகிறேன். அவரது பிரச்சாரத்தால் எந்த மாற்றமும் ஏற்படப்போவ தில்லை.

தமிழகத்தில் உள்ள பெரும் பாலான தலைவர்கள் குமரி மாவட்டத்தில் இருந்துதான் பிரசாரத்தை தொடங்குகிறார்கள். குமரி மாவட்ட மக்கள் மனதில் பாரதீய ஜனதா கட்சி நீக்கமற நிறைந்துள்ளது. தாமரையின் மீது அவர்கள் அன்பு கொண்டுள்ளனர்.

எனவே இங்குள்ள மக்கள் தாமரைக்கே ஆதரவாக இருப்பார்கள்.

தமிழகத்தில் அடுத்த ஆண்டு நடக்க இருக்கும் சட்டசபை தேர்தலுக்காக பாரதீய ஜனதா கட்சி சார்பில் குழு அமைக்கப்பட்டுள்ளது. அக்குழு தனது பணியை தொடங்கி உள்ளது. அடுத்த தேர்தலில் ஆட்சியை பிடிக்கும் அளவிற்கு பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெறும். பாரதீய ஜனதா கூட்டணியில்தான் ராமதாஸ் இருக்கிறார்.

டி.எஸ்.பி. விஷ்ணுபிரியா தற்கொலை விவகாரத்தில் உண்மை குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும். யார் விசாரணை செய்கிறார்கள் என்பது முக்கியமல்ல. இன்னொரு விஷ்ணுபிரியா உருவாகி விடக்கூடாது என்பதுதான் முக்கியம்.

நாகர்கோவிலில் மத்திய மந்திரி பொன். ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு அளித்த பேட்டி

Leave a Reply

Your email address will not be published.

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.