நீதி மன்றத்தில் வழக்குகள் முடங்கி கிடக்கின்றன' என, வெறுமனே சொல்லிக் கொண்டிருக்காமல், 10 ஆண்டுகளுக்கும் மேலாக, மாநில நீதி மன்றங்களில் முடங்கிக்கிடந்த வழக்குகளில், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ் பெற்றுள்ளது, ம.பி., அரசு.

இதன் மூலம், நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துள்ளதுடன்,நீதிபதிகளின் பணிச் சுமையும் குறைந்துள்ளது.

பாஜக.,வைச் சேர்ந்த, முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தலைமையிலான மத்திய பிரதேசத்தில், தாலுகா நீதி மன்றம் , மாவட்ட நீதிமன்றம் , மாநில உயர்நீதிமன்றம் என, அனைத்து நீதி மன்றங்களிலும், லட்சக் கணக்கான வழக்குகள் முடங்கிக் கிடக்கின்றன.

மாஜிஸ்திரேட், நீதிபதிகள், நீதிமன்ற பணியாளர்கள் பற்றாக் குறை போன்ற பல காரணங்களால், நீதி மன்றங்களில் வழக்குகள் அதிகளவில் தேங்கியுள்ளன. இதைகுறைக்க, அவ்வப்போது சிறப்புவழக்கு தீர்வு முகாம்கள் நடத்தியும் பலனின்றி போனதால், தேவையற்ற வழக்குகளை வாபஸ் பெறுவதுதான், சரியான வழியாக இருக்கும் என்று , மாநில அரசு கருதியது.

அதையடுத்து, இந்திய தண்டனை சட்டப்படி, சாதாரண குற்றங்களுக்காக தொடரப் பட்டிருந்த, 10 ஆண்டுகளுக்கு முந்தைய வழக்குகள், பெரியளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வழக்குகளை பட்டியலிடுமாறு, நீதித்துறைக்கு உத்தரவிடப்பட்டது.

அதன்படி, அனைத்து மாவட்ட கோர்ட் மற்றும் உயர் நீதிமன்றங்களில், முடங்கிக்கிடந்த வழக்குகள் பட்டியலிடப்பட்டன; அந்தபட்டியல், மாநில அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டது. மாநில உள்துறை அமைச்சர் பாபுலால் கவுர், 1.84 லட்சம் வழக்குகளை வாபஸ்பெறும் அறிவிப்பை, நேற்று வெளியிட்டார்.

பிறர்மீது, மாநில அரசு தொடர்ந்திருந்த அந்த வழக்குகளை வாபஸ்பெறுவதால், அரசுக்கு பெரியளவில் பாதிப்பு எதுவுமில்லை என, தெரிவித்த அமைச்சர், பிற முக்கிய வழக்குகளில், இதுபோல நடந்து கொள்ள மாட்டோம் என, உறுதியளித்தார்.
அமைச்சர் பாபுலால் கவுர், மேலும் கூறியதாவது:கோர்ட்டுகளில், மலை போல தேங்கியுள்ள வழக்குகளை குறைப்பதற்கு இதுவும் ஒரு வழி. 'பெட்டிகேஸ்' எனப்படும், சிறிய குற்றங்களுக்கான வழக்குகள் மட்டுமே, வாபஸ்பெறப்பட்டு உள்ளன.

இதனால் கிடைக்கும் நேரத்தை, நீதிமன்றங்கள் பிற முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளுக்கு செலவிடலாம். இவ்வாறு அமைச்சர் கூறினார்.

Tags:

Leave a Reply