நியூயார்க்கில் நடைபெறும் ஐ.நா. பொதுச் சபை கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். அதே நேரத்தில், இந்தியாவிற்கு முதலீடு ஈர்க்கும் விதமாக, அமெரிக்காவில் செயல்படும் பல்வேறு நிதி நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளையும் பிரதமர் மோடி நேரில் சந்தித்துப் பேசினார்.

அமெரிக்காவின் நிதித் தலைநகராகத் திகழும் நியூயார்க் நகரில், ஐக்கிய நாடுகள் பொதுச் சபைக் கூட்டத்தில் பிரதமர் மோடி இன்று உரையாற்றுகிறார். இதற்காக நியூயார்க் சென்றுள்ள அவர், ஐ.நா. கூட்டத்தில் பங்கேற்பதற்காக வந்துள்ள பல்வேறு நாடுகளின் தலைவர்களையும் சந்தித்துப் பேசினார். வங்கதேசப் பிரதமர் ஷேக் ஹசீனாவை நேற்று சந்தித்த பிரதமர் மோடி, இருநாட்டு உறவுகளை மேம்படுத்துவது குறித்து ஆலோசித்ததாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஷேக் ஹசீனாவின் மகன், சஜீப் வசெத் மற்றும் இரு நாட்டு அதிகாரிகள் இந்த சந்திப்பில் பங்கேற்றனர்.

நிதி நிறுவனங்களுடன் சந்திப்பு :

இதனிடையே, அமெரிக்காவின் முன்னணி நிதி நிறுவனங்களின் தலைவர்களை பிரதமர் மோடி நேற்று சந்தித்துப் பேசினார். அப்போது, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் குறித்து அவர்களுடன் விரிவாக ஆலோசனை நடத்திய பிரதமர் மோடி, முதலீட்டு வாய்ப்புகளுக்கு தடையாக இருக்கும் முட்டுக்கட்டைகளை பாரதிய ஜனதா அரசு விரைவில் நீக்கும் எனவும் உறுதியளித்தார்.

மோடியுடனான சந்திப்பை பற்றி முதன்மை அலுவலர் விக்கி ஃபுல்லர் பேசுகையில், "பிரதமர் மோடி உடனான உரையாடல் திருப்தி அளிக்கிறது. இந்தியாவில் முதலீட்டு வாய்ப்புகள் ஏராளமாக உள்ளன. அதில் உள்ள சிக்கல்கள் குறித்து அவர் (மோடி) தெரிவிக்கும் கருத்துகள், இந்தியாவில் செய்யப்படும் முதலீட்டை அதிகரிக்க நிச்சயம் உதவிடும்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

பிளாக் ஸ்டோன் (BLACKSTONE) நிறுவன தலைவர் ஸ்டீவ் பேசுகையில், "இந்தியாவில் முதலீடு செய்வதில் உள்ள சிக்கல்கள் குறித்து பல்வேறு விஷயங்கள் அவரிடம் (மோடி) முன்வைக்கப்பட்டன. அவற்றை அவர் திறந்த மனதுடன் ஏற்றுக் கொண்டார்" இவ்வாறு தெரிவித்துள்ளார்.

ஊடக நிறுவன தலைவர்களுடன் சந்திப்பு :

நிதி நிறுவனத் தலைவர்களைத் தொடர்ந்து, அமெரிக்காவில் செயல்படும் முன்னணி ஊடக நிறுவனங்களின் தலைவர்களையும் பிரதமர் மோடி சந்தித்து ஆலோசனை நடத்தினார். ஊடகத் துறையில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் மற்றும் இந்தியாவில் உள்ள முதலீட்டு வாய்ப்புகள் பற்றியும் அவர்களுடன் பிரதமர் மோடி பேசினார். இந்த சந்திப்பின் போது, சோனி, டிஸ்கவரி, டைம் வார்னர் போன்ற முன்னணி ஊடக நிறுவனங்களின் தலைவர்கள் பங்கேற்றனர்.

அதனைத் தொடர்ந்து நியூயார்க் நகரத்தின் முன்னாள் மேயர் மைக்கேல் ப்ளூம்பர்க் (Bloomberg) அவர்களையும், பிரதமர் மோடி சந்தித்துப் பேசினார்.

பான் கி மூன் மற்றும் மார்க் சுக்கர்பெர்க் உடன் சந்திப்பு :

ஐ.நா. சபையில், பொதுச்செயலாளர் பான் கி மூன் இன்று ஏற்பாடு செய்துள்ள, மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். அதைத் தொடர்ந்து நாளை, இந்தியா, பிரேசில், ஜெர்மனி, ஜப்பான் ஆகிய 4 நாடுகளின் உச்சி மாநாட்டிலும் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

அதனைத் தொடர்ந்து, கலிபோர்னியா மாகாணத்தின் சான்பிரான்சிஸ்கோ சிலிக்கான் வேலியில் உள்ள ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைமையகத்துக்கு செல்லும் பிரதமர் மோடி, அந்நிறுவன தலைமை செயல் அதிகாரி மார்க் சுக்கர்பெர்க்கை சந்தித்து பேச உள்ளார்.

ஆப்பிள் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி டிம் குக், கூகுள் இணையதளத்தின் புதிய தலைமை செயல் அதிகாரியான சுந்தர்பிச்சை உள்ளிட்ட பிரபலங்களையும் பிரதமர் மோடி தனது அமெரிக்கப் பயணத்தில் சந்தித்துப் பேச உள்ளார். அதனைத் தொடர்ந்து வரும் 28ம் தேதி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவையும், பிரதமர் மோடி சந்திக்கிறார்.

Leave a Reply