மாண்டவ்ய ரிஷியின் ஆஸ்ரம வாசலில் அவர் மௌன தியானத்தில் ஈடுபட்டிருக்கும்போது சில திருடர்கள் கொள்ளையடித்த பொருள்களோடு அங்கு வர, அவர்களைத் தொடர்ந்து ராஜாவின் காவலாளிகள் வேகமாக வருவதைக் கண்டு ஆஸ்ரமத்தில் திருடிய பொருள்களைப் போட்டுவிட்டு ஒளிந்துகொள்ள ,வீரர்கள் மாண்டவ்யரிடம் ”ஹே ரிஷி, இங்கே சில திருடர்கள் வந்தார்களா?” எனக் கேட்க, மௌன தியானத்தில் ரிஷி பதில்

சொல்லாதிருக்க, வீரர்கள் ரிஷியின் ஆஸ்ரமத்தில் நுழைந்து திருட்டுப்போருள்கள் அங்கே இருப்பதைக் கண்டு கைப்பற்றி திருடர்களையும் பிடித்து ரிஷியோடு சேர்த்து அரசனிடம் கொண்டுசெல்ல, அவன் அனைவரையும் கழுவேற்ற, ரிஷி சாகவில்லை.

கழுமரத்திலேயே தியானம் செய்து மற்ற ரிஷிகள் அவரை அணுகி வேண்ட, அரசன் தவறுக்கு வருந்தி கழுமரத்தை வெட்ட, அவர் உடலில் இருந்த கழு ஆணி வெளியே எடுக்க முடியாததால் அதோடு அவர் செல்கிறார். ஆணி மாண்டவ்யர் என்ற பேர் நிலைக்கிறது.

நேரே தர்மதேவதையிடம் சென்று ”நான் செய்த தவறென்ன. எதற்காக இந்த மரண தண்டனை” எனக் கேட்க ”நீ சிறுவயதில் ஒரு சிறு வண்ணத்துப் பூச்சியின் சிறகில் கூரான தர்ப்பைப் புல்லைச் செறுகினாய். அதன் விளைவு”

‘அப்போது எனக்கு என்ன வயது?.

”பன்னிரண்டு'”

அறியாத வயதில் செய்த சிறு குற்றத்திற்கு இவ்வளவு பெரிய தண்டனையா? இது அநியாயம் என்றார் மாண்டவ்யர்.

அதுதான் கர்ம வினைப்பயன் என்கிறார் தர்மா.

“‘தர்மா, ஒரு குழந்தை 14 வயதுக்குள் செய்யும் ‘தவறுகள் பாபமாகாது. எனவே என் அறியாமையில் செய்த பிழைக்கு இந்த தண்டனை கொடுத்த நீ பூவுலகில் பிறப்பாய் அரசகுலத்தில் பிறந்தாலும் அரியணை ஏற முடியாதவனாக இருப்பாய் என சாபம் கொடுத்தார்…

ஆணிமாண்டவ்யர் சாபத்தால் தர்மன் வியாசருக்கும் வேலைக்காரிக்குமான உறவில் விதுரனாக சந்திர குலத்தில் வந்து விதுரனாக பிறந்தார். விதுரர் பெரும் நீதிமானாக விளங்கி, “விதுர நீதி’ என்ற தர்ம சாஸ்திரத்தை உலகுக்கு அளித்தார்!

Leave a Reply