அமெரிக்க தொழில் அதிபர்கள் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, இந்தியாவில் 500 ரெயில் நிலையங்களில் கூகுள் ஒருங்கிணைப்புடன் 'வை-பை' வசதி ஏற்படுத்தப்படும் என்று கூறினார்.

ஐ.நா. பொதுச் சபையின் 70-வது கூட்டத்தொடரில் கலந்து கொள்வதற்காக அமெரிக்கா வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள சான் ஜோஸ் நகருக்கு சென்றார். 33 ஆண்டுகளுக்கு பிறகு இந்திய பிரதமர் ஒருவர் கலிபோர்னியா சென்றது, இதுவே முதல்முறை ஆகும்.

ஜான்ஜோஸ் நகரில் பிரபல பாடகர் கைலாஷ் கெர், சீக்கிய மற்றும் குஜராத்தி சமூகத்தினரையும் மோடி சந்தித்து பேசினார்.

மேலும், ஜான்ஜோஸ் நகரில் மோடி அமெரிக்காவின் பிரபல தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் டிம் குக்(ஆப்பிள்), சாந்தனு நாராயணன்(அடோபி), சத்யா நாதெள்ளா(மைக்ரோசாப்ட்), பால் ஜேக்கப்ஸ்(குவால்காம்), சுந்தர் பிச்சை(கூகுள்), ஜான் கேம்பர்ஸ்(சிஸ்கோ) ஆகியோரை தனித்தனியாக சந்தித்து பேசினார்.

அதன்பின்னர், சான்பிரான்சிஸ்கோ நகரில் உள்ள சிலிக்கான் வேலிக்கு பயணமான மோடி, அங்கு அமெரிக்க தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அதிகாரிகள் 350 பேருக்கு சிறப்பு விருந்தும் அளித்தார்.

அப்போது, இந்தியாவில் மேலும் அதிகமாக தொழில் தொடங்க வருமாறு அவர்களுக்கு மோடி அழைப்புவிடுத்து பேசினார்.

எங்களுடைய பொருளாதாரம், வாழ்க்கைமுறை தற்போது அதிகளவில் ஒயர் இணைப்பை சார்ந்ததாக உள்ளது. தகவல், புள்ளி விவரங்கள் மற்றும் அறிவுசார் பொருட்களின் உரிமைகளுக்கும் பாதுகாப்புக்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.

ஆளுமைத் திறன், வெளிப்படையானநிலை, பொறுப்புத்தன்மை, எளிதில் அணுகக்கூடிய மற்றும் அனைவரும் பங்கேற்கும் வகையில் நிர்வாகத் திறன் கொண்டதாக எங்களது அரசை உருவாக்கி வருகிறோம். இவற்றை சிறப்பாக, சிக்கனமாக நடத்துவதற்கு மின்னணு நிர்வாக முறை சிறந்த அடித்தளமாகும்.

டிஜிட்டல் இந்தியா திட்டம், ஏழைகள், நலிவடைந்த பிரிவினர், வெகுதொலைவில் உள்ளோரை சென்று அடையவும், இந்தியாவை உயிர்ப்புடனும், செயலாற்ற கூடியதாகவும் மாற்ற உதவும்.

இத்திட்டத்தின் மூலம் மிகப் பெரிய மாற்றத்தை ஏற்படுத்த முடியும். இந்தியாவில் 80 கோடிபேர் 35 வயதுக்கு உட்பட்டோர் ஆவர். இவர்களால் அமைதியாக சாதனை படைக்க இயலும். இதை சாதிப்பதற்கு எங்கள் இளைஞர்கள் காத்திருக்கின்றனர்.

தொழில் தொடங்க அனுமதி வழங்குவதில் எளிய நடைமுறைகளை உருவாக்கி இருக்கிறோம். இதன் மூலம் தொழில்கள் தொடங்க எளிதாக அனுமதி பெறமுடியும். இந்ததொழில் நுட்பத்தை நாங்கள் வேகமான வளர்ச்சிக்காக பயன்படுத்தி வருகிறோம்.

வை–பை சேவை தற்போது விரிவுபடுத்தபட்டு வருகிறது. விமான நிலைய பயணிகள் தங்கும் அறைகளில் மட்டுமின்றி ரெயில் நிலையங்களிலும் இந்த சேவை வசதி செய்துதருவதை உறுதி செய்து இருக்கிறோம். இதன் மூலம் அனைத்து தரப்பு மக்களும் வை–பை சேவையை பெற முடியும்.

கூகுள் நிறுவனத்துடன் இணைந்து குறுகிய காலத்துக்குள் 500 ரெயில் நிலையங்களில் வை–பை வசதியை ஏற்படுத்துவோம். இதேபோல் 5 லட்சம் கிராமங்களுக்கு அகண்ட அலைவரிசை (பிராட்பேண்ட்) இணையதள சேவை விரிவுபடுத்தப்படும்.

இங்கே ஒரேகூரையின் கீழ் பல்வேறு தொழில் நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் இருக்கின்றனர். இதுபோன்ற ஓரிடத்தால் நிச்சயம் இந்த உலகை சிறப்பாக வடிவமைக்க இயலும்.

கலிபோர்னியாவில் இருப்பது எனக்கு மிகுந்தமகிழ்ச்சி அளிக்கிறது. இந்த இடம்தான் சூரியன் உலகில் கடைசியாக மறையும் இடமாக உள்ளது. அதேநேரம், இங்குதான் ஒருநாளின் வெளிச்சத்தை தரும் புதிய சிந்தனைகள் தொடங்குகின்றன இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

Leave a Reply