இலங்கைக்கு ஆதரவான அரசாக இல்லாமல், இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான அரசாக பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு உள்ளதாக மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னையை அடுத்த தாம்பரத்தில் வங்கிகள் சார்பில் முத்ரா வங்கி கடன் வழங்கும் நிகழ்ச்சி நடை பெற்றது. இதில் மத்திய நெடுஞ் சாலைகள் துறை இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கலந்துகொண்டு பயனாளிகளுக்கு வங்கி கடன்களை வழங்கினார்.

பின்னர் நிருபர்களிடம் பொன்.ராதா கிருஷ்ணன் கூறியதாவது:-

இந்திய அரசாங்கத்தை பொறுத்த வரையில் இலங்கை தமிழர்கள் மிகப்பெரிய துயரத்துக்கு ஆளாகி உள்ளார்கள். அங்கு புதிய அரசு அமைக்கப்பட்டு இருக்கிறது. புதிய அரசாங்கதிடம் இலங்கை தமிழர்களுக்கு சம அந்தஸ்தும், சம உரிமையும் வாங்கித்தர வேண்டிய கடமை இந்திய அரசாங்கத்துக்கு உள்ளது.

கடந்த கால காங்கிரஸ் அரசுபோல இல்லாமல் இலங்கை அரசுக்கு ஆதரவான நிலையை எடுக்காமல் இலங்கை தமிழர்களுக்கு ஆதரவான நிலையை எடுக்கக் கூடிய அரசு பிரதமர் நரேந்திரமோடி தலைமையிலான பா.ஜ.க அரசு. இலங்கை தமிழர்களுக்கு எதை, எப்படி, எப்போது செய்யவேண்டுமோ, அந்த கடமையை இந்த அரசாங்கம் செய்யும். வெற்றி பெறும்.

முத்ரா கடன் வழங்கும் திட்டத்தில் தமிழகத்தில் 25 லட்சம் பேர் கடன்உதவி பெறுவார்கள். ஒவ்வொரு வங்கியும் தலா 25 பேருக்கு கடன்வழங்கும். இதற்காக ரூ.146 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. நாடுமுழுவதும் 1 வார காலமாக கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. தொடர்ந்து பொது மக்களுக்கு வங்கிகடன் வழங்குவது நடைபெறும் இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply