ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், 3 நாள் அரசு முறை பயணமாக டெல்லி வந்தார். இன்று அவர் பிரதமர் நரேந்திர மோடியுடன் முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார்.

பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஏப்ரல்மாதம் 12–ந் தேதி ஜெர்மனிக்கு சென்றார். ஹனோவரில் ஜெர்மனி தொழில் அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர்களுக்கு, 'மேக்இன் இந்தியா' என்னும் 'இந்தியாவில் தயாரிப்போம்' திட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்புவிடுத்தார். தொடர்ந்து பெர்லின் சென்று ஜெர்மனி பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெலுடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

அதன் தொடர்ச்சியாக ஏஞ்சலா மெர்க்கெல் இந்தியாவில் 3 நாள் அரசு முறை சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார். நேற்று அவர் டெல்லி வந்தார். அவருக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

இன்று (திங்கட்கிழமை) அவருக்கு ஜனாதிபதி மாளிகையில் சம்பிரதாய முறைப்படி வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதைத் தொடர்ந்து அவர் ராஜ்காட்டில் அமைந்துள்ள தேசப்பிதா மகாத்மா காந்தியின் நினைவிடத்துக்கு சென்று, மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்துகிறார்.

பின்னர் அவர் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து இரு தரப்பு முக்கிய பேச்சு வார்த்தை நடத்துகிறார்.பிரதமர் மோடி–ஏஞ்சலா மெர்க்கெல் சந்திப்பின் போது, இருதரப்பு உறவினை புதிய உச்சத்துக்கு கொண்டுசெல்வது குறித்து விவாதிக்க உள்ளனர். பருவ நிலை மாற்றம் உள்ளிட்ட உலகளாவிய விஷயங்களும் இந்த பேச்சு வார்த்தையில் இடம்பெறும். இந்தியாவில் ஜெர்மனியின் புதிய முதலீடுகள் குறித்தும் விவாதிக்கப்படும் என எதிர்பார்ப்பு உள்ளது. இந்தியாவின் 7வது பெரிய அன்னிய முதலீட்டாளர் என்ற நிலையில் ஜெர்மனி இருப்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

Leave a Reply